
பதிவுலகில் நான் என்னும் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அப்பா ராஜாராமன், நண்பர் சீமான்கனி மற்றும் சகோதரி கயல்விழி அவர்களுக்கு நன்றி.
1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
கமலேஷ்
2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
கமலேஷ்தான் உண்மையான பெயர்.
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
வெகுநேரமாய் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு
இம் மாட்டு தொழுவத்தின் கதவு திறந்தேன்.
யூதாஸுக்கு பயந்து ஓடி வந்த இயேசு
வெளியில் மூச்சிரைக்க நின்றுகொண்டிருந்தார்.
என்னவென்று நான் விசாரிக்க துவங்கிய கணம் -
தான் இவ்வுலகில் அவதரித்ததே முட்டாள்தனமென்று கூச்சலிட்டபடி
மீண்டும் மரியன்னையின் கருவறைக்குள் புகுந்து கொண்டார்.
(புரியலையில்ல, அப்படி ஒரு பிறழ்வுதான்)
4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
சரியாபோச்சி, பிரபலப்படுத்த நான் என்னங்க இங்க பிரஷர் குக்கரா விக்கிறேன். (அநியாயமான கேள்வி பாஸ் இது)
5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஒவ்வொரு காகிததிற்குள்ளும் உறைந்திருக்கும்
மரத்தின் இரத்தத்தை போல்,
ஒரு இளைஞனின் கையிலிருக்கும்
சிகரெட் சூட்டு தழும்பில்
ஆழத்தில் கிடக்கும் ஒரு தாவணி போல்,
என் பெரும்பான்மையான வரிகளில்
நானே புரையோடியிருக்கிறேன்
காரணம்: ஒரே ஒரு சொல்லெடுத்து இவ் உலகை பூட்டிவிட்டு
தனியே ஒரு கவிதைக்குள் அமர்ந்து
சத்தமாய் அழவும், சிரிக்கவும், முணுமுணுக்கவும் பிடித்திருக்கிறது.
6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இரண்டும் இல்லை.
உச்சிப்பொழுதில், காய்ந்த வயிறுடன்
செருப்பில்லாத கால்களோடு
தள்ளாடி தள்ளாடி ஒரு தண்ணீர் தொட்டி நோக்கி நகரும்
கைவிடப்பட்ட அனாதை கிழவனின் கடைசி நிமிடங்களை
நான் என்ன செய்ய ?
இறந்து போன ஒரு பறவையின் சடலத்தை
இலகுவாய் கடந்துவிட முடியாத இதயத்தை
நான் என்ன செய்ய ?
தலை கருகி, உயிர் வற்றி
வாழ்க்கை முடியப்போகும் கடைசி தருணத்தில்
நல்லெண்ணெய் இட்டு,
திரியை தூண்டிய சிறுமியை நோக்கி
நன்றி கலந்த வெளிச்சத்தோடு
கை கூப்பியபடி எரியும்
ஒரு மாடவிளக்கை
அத்தகைய தருணங்களில் நான் செய்வது
வக்கிருந்தால் கிழவனுக்கு ஒரு பிடி சோறு,
பறவைக்கு ஒரு சொட்டு கண்ணீர்,
சிவனாகிய சிறுமிக்கி - இரு வரி கவிதை.
7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
நான் ஒத்தப் பிள்ளை பெத்தவங்க.
8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
இரண்டும் பதிவுலகிற்கு வெளியில் உண்டு.
எண்ணை பிசுக்கு மற்றும் குங்கும வாசனை கலந்துலவும்
கலை நயமிக்க கோவில்களை காணும்போது பொறாமையும்,
தேவையில்லாமல் அங்கே உபரியாய் அமர்ந்திருக்கும்
தெய்வங்களை காணும்போது கோபமும் வருவதுண்டு.
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?
முதல் பின்னூட்டத்தின் மூலம் கைகுலுக்கியவர் - நம்ம தலைவர் D .R .அசோக் .
நேரில் பாராட்டியது அறை நண்பன் ஸ்ரீதர்.
(இரவு பணி முடிந்து வந்து அசந்து தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி பாராட்டினான். பாவிப்பய.)
10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.
அனைத்துமா, கூறலாமே...
என் இவ்வருட டைரியின் முதல் பக்கத்தில் கவிஞர் கார்த்திக் முருகனின்
இந்த கவிதையை எழுதி இருக்கிறேன்.இப்படி இருக்கவே ஆசையும்படுகிறேன்.
கூடடைய விரும்பாததொரு
கரும் பறவை
இரை தேடிச் செல்லும்
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகளை
பிரசவித்துச் செல்கிறது.
பூச்சரம் போல முழம் முழமாக நீண்டு கொண்டே போகும் இத் தொடர் பதிவில் நான் முடிய நினைக்கும் மல்லிகைகள்
மார்க்கண்டேயன்.
வினோத் நிலா,
geetha
மற்றும்
hemikrish .
.