Wednesday, September 29, 2010

கதவாயுதம்

பறந்தபடி கிளை மீது வந்தமரும்
ஒரு பறவையின் மடங்கும் சிறகைப் போல
அத்தனை இயல்பாய் இருப்பதில்லை
நிராகரிப்பின் போது அடைக்கப்படும் கதவுகள்

அறைந்து சாத்தப்படும்
ஒரு கதவின் முன்னால் நிற்க வாய்த்தவன்
தன் வாழ்நாளெல்லாம் ஒரு சிலுவை போல்
அக் கதவை சுமந்து திரிகிறான்.

கர்த்தரின் நடுநெஞ்சில் இறங்கும்
கடைசி ஆணியென ஒலிக்கிறது
ஒரு நிராகரிப்பின் போது
மூடிய கதவினில் நகரும் தாழ்.


சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.

ஒரு புத்தகத்தின்
பக்கங்களை புரட்டும் சுவாதீனத்துடன்
மூடப் பெறும் கதவுகளையும்,
மயானத்தில் எரியூட்ட போகும்
ஒரு சிதையின் முகத்தை மறைக்கும்
கடைசி வரட்டியையும்,
ஒரே நேர் கோட்டில் கண்டு
திடுக்கிட்ட பறவைகள்
தத்தம் வாழ்நாளில்
கதவுகளை தட்டுவதுமில்லை,
வைத்துக் கொள்வதுமில்லை.

.

73 comments:

jothi said...

//சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.//

அழகு,.. எத்தனை உண்மையான வரிகள்

jothi said...

//தத்தம் வாழ்நாளில்
கதவுகளை வைத்துக் கொள்வதுமில்லை,
தட்டுவதுமில்லை.//

தட்டவும் வேண்டியதில்லை, திறக்கவும் வேண்டியதில்லை,.

கலக்கலான கவிதை

jothi said...

நல்ல ரசனையோடும் ஆயிரம் வலியோடும் புனையப்பட்ட கவிதை,..


அருமை கமலேஷ்,..

வினோ said...

இதயத்தில் இரையப்படும் கதவுகள்
சில
விழி முன்
நேசத்தில் திறக்கப்படும்
பல
சொர்க்கங்களை
மறைத்து விடுகிறது...

கமலேஷ்.. கவிதை அருமை...

சீமான்கனி said...

//ஒரு சிதையின் முகத்தை மறைக்கும்
கடைசி வறட்டியாய் கண்டு
திடுக்கிட்ட பறவைகள்
தத்தம் வாழ்நாளில்
கதவுகளை வைத்துக் கொள்வதுமில்லை,
தட்டுவதுமில்லை.//

கதவருகில் காத்திருக்க இடுக்கில் வந்த இனிய கவிதை ரசித்தேன்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///தத்தம் வாழ்நாளில்
கதவுகளை தட்டுவதுமில்லை,
வைத்துக் கொள்வதுமில்லை///


நிராகரிப்பிற்கு அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது..
ஹ்ம்ம்.. உண்மையில் அழகு.. :-)

Anonymous said...

நிராகரிப்பின் அத்தனை வடிவங்களையும் உணரவைக்கிறது கவிதை...வலியை உணர்ந்தது போல் அத்தனை வரிகளும்..கொடுமை இந்த வலி வாங்கியவர்கள் அறிவர் இதன் கொடூரத்தை....மனதில் நின்றுவிட்டது வரிகள் ஆனால் வலிகள் வேண்டாமே என சொல்கிறது சின்ன இதயம்...

santhanakrishnan said...

கதாயுதத்தை விட
கதவாயுதம் வலியதுதான்.
எல்லோரும்
ஏதாவது ஒரு நொடியில்
நிராகரிப்பின் வலி
உணர்ந்தவர்கள்.

உண்மை கமலேஷ்.

சிவாஜி சங்கர் said...

இந்தமுற ஏதும் சொல்ல போறதில்ல..,
நேர்ல பாக்கும் போது சொல்றேன்...

கயல் said...

//
சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.
//

அழகு
//
ஒரு புத்தகத்தின்
பக்கங்களை புரட்டும் சுவாதீனத்துடன்
மூடப் பெறும் கதவுகளையும்,
மயானத்தில் எரியூட்ட போகும்
ஒரு சிதையின் முகத்தை மறைக்கும்
கடைசி வரட்டியையும்,
ஒரே நேர் கோட்டில் கண்டு
திடுக்கிட்ட பறவைகள்
தத்தம் வாழ்நாளில்
கதவுகளை தட்டுவதுமில்லை,
வைத்துக் கொள்வதுமில்லை.

//
நிச்சயமாய் இது போலும் பற்றின்றி வாழ்வது வாய்ப்பின் எத்தனை சுகம்?

rvelkannan said...

நீண்ட நாள் கழித்து ...
மூச்சு விட முடியவில்லை கமலேஷ்
ஒவ்வொரு பத்தியாக என்னை தனிமை சிலுவையில் அறைந்தாலும்
கடைசி பத்தி என்னை மொத்தமாய் எரித்து விட்டது.
//மயானத்தில் எரியூட்ட போகும்
ஒரு சிதையின் முகத்தை மறைக்கும்
கடைசி வரட்டியையும்,
ஒரே நேர் கோட்டில் கண்டு
திடுக்கிட்ட பறவைகள்//
இந்த பறவைகள் என்றும் அலையும் என் மனதில்...

சுந்தர்ஜி said...

கைகூப்பி வணங்குகிறேன் கமலேஷ்.

உங்கள் முழுக்கவிதையும் மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.மொழியின் ஆளுமை குறித்து உங்களிடம் நான் கற்றுக்கொள்கிறேன் கமலேஷ்.

எத்தனை கசப்பு நிராகரிப்பின் விஷம்?அது இந்தக் கவிதை முழுவதுமாய் இறங்கி இன்று காலை நான் படிக்க வாய்த்த நிமிஷம் முதல் முள்ளாய் என்னை வதைக்கிறது.

கவிதை பூராவும் பிரமிப்பூட்டும் உருவகங்கள் புறாவுக்கு இரைக்கப்பட்ட தானியங்கள் போல சிதறிக்கிடக்கின்றன.

நிறைய எழுதாவிட்டாலும் நிறைவாக எழுதுகிறீர்கள்.பெருமையாக இருக்கிறது உங்களை எப்போதாவது வாசிக்கக் கிடைத்தாலும்.

என்னால் இயன்ற கௌரவிப்பாய்- உங்கள் முடிக்கு ஒரு கிரீடமாய்- இந்தக் கவிதையை என் தளத்தில் பதியனிட்டுக்கொள்கிறேன்.மணக்கட்டும் என் பக்கங்கள்.

விஜய் said...

நலம் தானே ?

"மூடிய கதவினில் நகரும் தாழ்"

சொல்கிறது ஆயிரம் கவிதைகளை

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

Ashok D said...

நிறைவு :)

'பரிவை' சே.குமார் said...

நல்ல ரசனையோடும் வலியோடும் புனையப்பட்ட கலக்கலான கவிதை,..

மார்கண்டேயன் said...

நிராகரிப்பின் வலியை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள் கமலேஷ் . . . ,

நல்ல படைப்பில் எது நல்ல படைப்பு என பிரித்துப் பார்க்க தெரியவில்லை,

ஒவ்வொரு வரிகளும் வாழ்ந்த காலங்களில் வாழ்ந்ததை சொல்கிறது,

என்ன சொல்லி வாழ்த்த, வார்த்தை தெரியவில்லை . . .

வாழ்க வளமுடன்,

நெஞ்சார்ந்த நன்றி . . .

இன்னும் செரிவூட்டுங்கள் எம் சிந்தனைகளை

Unknown said...

நல்லா இருக்குங்க.

rvelkannan said...

சுந்தர் ஜி போல் நானும் எடுத்து செல்கிறேன் கமலேஷ். நன்றி

நாடோடி said...

நிர‌க‌ரிப்பின் வ‌லியினை துல்லிய‌மாக‌ ப‌திவு செய்துள்ளீர்க‌ள்.. வாழ்த்துக்க‌ள் க‌ம‌லேஷ்..

Unknown said...

/////சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.////

உண்மைதான் நண்பா.

ஹேமா said...

கமலேஸ் ரொம்பநாளாக் காணோம்.சுகம்தானே !

//சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.//

இது கொடுமையான அனுபவம்.

யாத்ரா said...

ஐயோ class,
ரொம்ப நல்லா இருக்கு கமலேஷ் கவிதை,,,,,,,,,,,,,

கமலேஷ் said...

@ ஜோதி :
வாங்க ஜோதி, நலமா, மிக்க நன்றி தோழரே

@ வினோ :
வாங்க நண்பா, மிக்க நன்றி நண்பா.

@ சீமாங்கனி : வாங்க நண்பா, வருகைக்கும், ரசித்தமைக்கு நன்றி ஜி.

@ ஆனந்தி : வாங்க சகோதரி, உண்மைதான் சகோதரி, நன்றி சகோதரி.

@ தமிழரசி : வாங்க சகோதரி, இந்த தலைப்புல என் வண்டி மாட்டை பூட்னா அது என்னமோ சுடுகாட்டு பக்கமாவே இழுத்திட்டுப்போது நான் என்ன செய்ய சகோதரி, மிக்க நன்றி சகோதரி வருகைக்கும், வாசிப்பிற்கும்.

@ சந்தானகிருஷ்ணன் : உண்மைதான் நண்பரே..தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி நண்பரே.

@ சிவாஜி சங்கர்: என்ன நண்பா நேர்ல பார்க்கும் போது அப்ப அடி நிச்சயமா? சீக்கிரம் பேசுவோம் நண்பா.நன்றி சிவா

@ கயல் : வாங்க சகோ , நன்றி சகோ.

@வேல்கண்ணன் : வாங்க நண்பரே, உங்க அன்புக்கும், அங்கீகாரத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

கமலேஷ் said...

@சுந்தர்ஜி: என்னன்னே, பெரிய வார்த்தையெல்லாம் சேர்த்து எழுதிட்டீங்க.

உங்களை மாதிரி பெரியவங்க வாழ்த்த கேக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குன்னே.

இந்த அங்கீகாரம் ஒரு கர்ப்பிணி வயித்து குழந்தையா எனக்குள்ள எட்டி எட்டி உதைக்கிதுன்னே,
சொல்ல தெரியாத சந்தோசம்ன்னே,,,

தலை தாழ்ந்த நன்றிண்ணே, நன்றிண்ணே.

@விஜய் : வாங்கன்னே, நலமா, வருகைக்கும் வாசிபிர்க்கும் நன்றிண்ணே.

@ D .R அசோக் : மிக்க நன்றி தோழரே..வருகைக்கும் வாசிப்பிற்கும்.

@ சே.குமார்: வாங்க குமார். ரொம்ப நன்றி நண்பரே.

@ மார்கேண்டயன்: வாங்க நண்பரே, ப்ராஜெக்ட் எப்படி போகுது, நன்றி நண்பரே.

@செல்வராஜ் ஜெகதீசன் : வாசிப்பிற்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே.

@நாடோடி : மிக்க நன்றி நண்பரே..தங்களின் கருத்திற்கு

@ ஸ்ரீதர் : நன்றி நண்பா,

@ ஹேமா : வாங்கக்கா,,ரொம்ப நல்லா இருக்கேன் நீங்க நலமா , ரொம்ப நன்றிக்கா

@ யாத்ரா : நன்றி யாத்ரா, நீங்க சொல்லி கேக்க சந்தோசமா இருக்கு.

Geetha said...

//திடுக்கிட்ட பறவைகள்
தத்தம் வாழ்நாளில்
கதவுகளை தட்டுவதுமில்லை,
வைத்துக் கொள்வதுமில்லை//

நின்று செல்ல வைத்த வரிகள்.

நீண்ட இடைவெளி கமலேஷ்......ம்ம்ம் வேலை பளு.

பாலா said...

வாவ் அருமை arumai

பாலா said...

வாவ் அருமை arumai

மிருணா said...

எத்தனை முறை வாசித்தேன் என்று தெரியவில்லை. இரு விதமாக வாசிக்க வைத்த கவிதை. ஒவ்வொரு மனதின் அடியாழத்தையும் தொடுகின்ற வரிகள். நான் சமீபத்தில் படித்தவைகளுள் மிகச் சிறப்பான வரிகள்.
வாழ்த்துக்கள்!

vinthaimanithan said...

நிராகரிப்பின் வலிகளை மிக அழகாக உணர்த்திச் செல்கின்றது கவிதை... மனதுக்குள் ஒருபாறாங்கல்லை இறக்கிவைத்த பின்!

அறிவு GV said...

//மூடிய கதவினில் நகரும் தாழ்//
இந்த வரியின் ஆழம் இன்னும் என் மனதில்...!

//திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது//
கண்டிப்பாக..! ஏமாற்றம் அளித்தாலும், இவை நம்மை காயப்படுத்தாத கதவுகள் அல்லவா...!

//தத்தம் வாழ்நாளில்
கதவுகளை தட்டுவதுமில்லை,
வைத்துக் கொள்வதுமில்லை//
சிறகுதிரும் பறவைகள் அனைத்தும் முற்றுப்புள்ளி வைக்குமிடம்.
(எனக்குமட்டும் சில சமயங்களில் அது தொடர் புள்ளியாக அமைந்துவிடுகிறது...!)

மிக அருமையான/ஆழமான வரிகள் கமலேஷ்.

அறிவு GV said...

//சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது//

ஒன்னும் இல்லை, போ போவென
துரத்தப்படும் யாசகனுக்கு..,
பார்த்தும் பாராமல் - தன்னைக்
கடந்து சென்றுவிடுபவன்
சிறந்தவன் தானே...?!!

நிலாமகள் said...

//அறைந்து சாத்தப்படும்
ஒரு கதவின் முன்னால் நிற்க வாய்த்தவன்
தன் வாழ்நாளெல்லாம் ஒரு சிலுவை போல்
அக் கதவை சுமந்து திரிகிறான்.//

படிக்கிறவங்க மனசையும் கனப்படுத்தும் வரிகள்... அவரவர் நினைவில் அகலாத அனுபவச் சுமையைக் கூட்டும்படியான தொடரோட்டத்தில் , முடிப்பில் இருக்கிறது ஆறுதலும் ஆதங்கமுமாய்... நாமும் பறவையாய் பிறந்திருக்கலாம்...!! சுகமோ சோகமோ ... வெளிப்பாடு அழகுதான் கமலேஷ், எப்போதும் போல் உங்களுக்கு!

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லா இருக்கு கமலேஷ்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

சில கவிதைகளை வாசித்தால் கொஞ்ச நேரமேனும் செயலற்றுப் போய்விடக்கூடும். வெகு நாட்களுக்குப் பிறகு அத்தகையதொரு கவிதையை வாசிக்க அளித்தமைக்கு நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

Thenammai Lakshmanan said...

திறந்தும் திறவாத கதவுகள் தான் எத்தனை..ஹ்ம்ம் கமலேஷ்

கா.பழனியப்பன் said...

கதவாயுதம் அருமை.
நிராகரிப்பின் வலி கொடுமையானதுதான்

கமலேஷ் said...

@ கீதா:
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி.

@ பாலா :
வாங்க பலா, நன்றி பாலா..

@ சைக்கிள் :
தங்களின் முதல் வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றி சகோதரி.

@ விந்தை மனிதன் :
தங்களின் முதல் வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றி தோழரே.

@ அறிவு G .V : வாங்க அறிவு நீங்க சொல்றது உண்மைதான் தோழரே. நன்றி தோழரே.

@ நிலாமகள் :
வாங்க நிலாமகள்...எழுதுற நாம எல்லோருமே பறவைதானே சகோதரி. நன்றி சகோதரி.

@ சே. குமார். :
மிக்க நன்றி நண்பரே.

@ சேரல்:
அடடே சேரல்..
வாங்க, வாங்க.உங்களுடைய தீவிரமான வாசகன் நான் தெரியுமா..நன்றி சேரல் வருகைக்கும் வாசிப்பிற்கும்.

@ தேனம்மை:
வாங்கக்கா..மிக்க நன்றிக்கா

@ பழனியப்பன். வாங்க நண்பரே...என்னாச்சி நம்ம அய்யனாருக்கு..மீண்டும் கூட்டிட்டு வாங்க. நன்றி நண்பரே..

தனி காட்டு ராஜா said...

உங்கள் ஒவ்வொரு கவிதையும் புயலென இருக்கு...........
எனவே இன்று முதல் கவிப் புயல் என்ற பட்டம் தங்களுக்கு பெரும் மதிப்புக்கும் ,மரியாதைக்கும் துளியும் சம்பந்தமில்லாத தனி காட்டு ராஜா அவர்களால் விழா குழுவின் சார்பாக வழங்கபடுகிறது .....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகாய் கோர்க்கப்பட்ட வரிகள்

உயிரோடை said...

கமலேஷ், சில வரிகளில் மனுஷ்ய புத்திரனின் சாயல் தெரிகிறது.

//ஒரு பறவையின் மடங்கும் சிறகைப் போல
அத்தனை இயல்பாய் இருப்பதில்லை
நிராகரிப்பின் போது அடைக்கப்படும் கதவுகள்//

வித்தியாமான ஒப்பீடு. எனை கவர்ந்த வரிகளும் கூட

hemikrish said...

//சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.//

நிறைய அர்த்தங்கள் சொல்கிறது இந்த வரிகள் கமலேஷ்..அருமையான படைப்பு..வாழ்த்துக்கள்

Mohan said...

Superb!

Thanglish Payan said...

Nalla irukku..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தங்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...

Priya said...

ரொம்ப நல்லா இருக்கு....வார்த்தைகள் அனைத்தும் அருமையா இருக்கு!

ஜோதிஜி said...

இது போன்ற சிலாக்கியமான வரிகளை படித்து ரொம்ப நாளாகிவிட்டது.

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமான வரிகள் - //திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது//

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி கமலேஷ்.

sakthi said...

நிராகரிப்பின் வலி நிறைந்த கவிதை
உவமைகள் மிக அற்புதம் கமலேஷ்

க.பாலாசி said...

ரொம்ப நிறைவா கொடுத்திருக்கீங்க கமலேஷ்...

//கர்த்தரின் நடுநெஞ்சில் இறங்கும்
கடைசி ஆணியென ஒலிக்கிறது//

எங்கோ இழுத்துச்செல்கிறது வரிகள்... அசத்தல்...

உயிரோடை said...

கவிதை நன்று

தமிழ் said...

அருமை

விஜய் said...

தம்பி நலமா ?

சிவகுமாரன் said...

\\\சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.///

நிராகரிப்பின் வலியை உணர்த்திய விதம் அருமை

பா.ராஜாராம் said...

அப்பா!!!

இறுக கட்டி, ஒரு முத்தம் குட்டி!

(சீக்கிரம் உன்னை பார்க்கணும்டா! ரொம்ப தேடலா இருக்கு)

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

சிவகுமாரன் said...

புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வந்தவன் மீண்டும் உங்கள் வலையில் வலம் வந்தேன். உங்கள் கவிதைகளை படிக்கும் போது என் கவிதைச் செருக்கு இடிந்து தரைமட்டமானது. கதவாயுதமும், கலைந்த கனவும் என்னுள் சொல்ல முடியாத உணர்வுகளைக் கிளறியது. உங்களைப் போல் எழுத முடியவில்லையே என்ற வெட்கம் எனக்குள் வந்ததை வெட்கமின்றி நான் சொல்லித் தான் ஆக வேண்டும். நிறைய எழுதுங்கள் நண்பா.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழா...

Sugirtha said...

ஒரு அருமையான கவிதையை எழுதிட்டு இவ்ளோ இடைவெளி? எவ்ளோ நாள் தான் காத்திட்டிருக்கறது? தொடருங்க கமலேஷ்... :)

அன்புடன் மலிக்கா said...

//சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.//

கவிதை மொத்தமும் அருமை கமலேஷ்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹாய்.. எப்படி இருக்கீங்க.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
அடுத்த கவிதை எப்போது?? :-)

ரிஷபன் said...

கவிதை அற்புதம்

Unknown said...

கவிதையை வாசித்ததோடு..........
இதயத்தோடு சேர்த்து
என் விரல்களும் சுருக்கென்றது......!
எமது கருத்து தனை எழுதச்சொல்லி
இங்கே எமக்கென்று ஒரு இடம் இல்லாத போதும்.......

எதை எடுத்துச்சொல்ல
எந்த வார்த்தையை தான் நான் விட்டுச்செல்ல.......?

ஒவ்வொரு வார்த்தையும் அருமை.....
காணக் கிடையா கதம்பங்களில் ஒன்றும் கூட!
நன்றி....
தங்களது வார்த்தை கதம்பம் தனை
என் நாவிலும் சூடச் செய்தமைக்கு.......
நன்றி......
(இக்கருத்து நான் வாசித்த கதவாயுதம், வலியோடு கலையும் கனவு, தோற்றப் பிழை, மஞ்சள் தடவிய மரணப் பத்திரிகை, நீ தந்தவை, சொல்லத் தெரியாதவை ஆகிய யாவற்றுக்கும் பொருந்தும்........)

அன்புடன் மலிக்கா said...

கமலேஷ் உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

கமலேஷ் said...

@தனிக்கட்டு ராஜா:
நண்பரே, எனக்கென்னவோ உங்க கமெண்ட்டை படிக்கும் போது
குலசாமி கோவில்ல மஞ்ச தண்ணி தெளிகிற ஆடுதான் ஞாபகம் வருது
மிக்க நன்றி ராஜா உங்களின் வருகைக்கு.

@தங்கமணி
மிக்க நன்றிங்க தங்கமணி

@ உயிரோடை:
வாங்க லாவண்யா அக்கா,
நன்றிக்கா, நன்றிக்கா...

@ ஸ்வேதா:
ரைட்டு

@ hemikrish
மிக்க நன்றி சகோதரி
தங்களின் கருத்திற்க்கு

@மோகன்
வாங்க மோகன் நன்றி மோகன்.

@ தங்க்லீஷ் பையன்.
மிக்க நன்றி நண்பரே..

@ வாசன்.
வாங்க நண்பரே.. எப்படி இருக்கீங்க..
நன்றி நண்பரே.

@பிரியா
வாங்க சகோதரி.
மிக்க நன்றி சகோதரி

@ஜோதிஜி
வாங்க ஜோதி சார்,
மிக்க நன்றி நண்பரே.

கமலேஷ் said...

@ வெங்கட் நாகராஜன் :
மிக்க நன்றி நண்பரே..
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

@சக்தி
மிக்க நன்றி சக்தி.
உங்களின் வரவு மகிழ்ச்சி

@பாலாசி
நன்றி நண்பரே.
தெளித்த வரிகளுக்கு

@திகழ்
வாங்க நன்றி

@சிவகுமாரன்
நன்றி நண்பரே. வருகைக்கும்
தங்களின் வாழ்த்துகளுக்கும்.

@பா.ராஜாராமன்.
அப்பா.
அப்ப இந்த கன்னத்திலேயும் ஒன்னு.

@சுகிர்தா.
சகோதரி,
இதோ அரிசி வெந்துகிட்டு இருக்கு.
நன்றி சகோதரி.

@மல்லிகா.
மிக்க நன்றி சகோதரி.
தாங்கள் என்னை வலைசரத்தில் அறிமுகபடுத்தியத்தை
மிகவும் தாமதமாகத்தான் வாசித்தேன்.
தங்களின் அக்கறைக்கு மிக்க நன்றி சகோதரி.

@ ஆனந்தி
சகோதரி.
பேனா பக்கத்துலேயே இருக்கு
விரல் மட்டும் போய் வாங்கியாரனும்.
நன்றி சகோதரி.

@ ரிசபன்
மிக்க நன்றி ரிசபன்.

@janomp
தங்களின் வருகைக்கும்
இத்தனை பெரிய வரிகளுக்கும்
மிக மிக நன்றி நண்பரே.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், நலமா?
முதன் முதலாய் இன்று தான் உங்களின் வலைப் பூவினைத் தரிசிக்கிறேன். சகோதரி ஹேமாவின் வலைப் பக்கத்தின் ஊடாகப் பின் தொடர்ந்து வந்தேன். அருமையான கவிதைகளைக் கொண்டு, வலைக்கு அணி சேர்க்கிறீர்கள். இருங்கள், படித்து விட்டு வருகிறேன்,

நிரூபன் said...

அறைந்து சாத்தப்படும்
ஒரு கதவின் முன்னால் நிற்க வாய்த்தவன்
தன் வாழ்நாளெல்லாம் ஒரு சிலுவை போல்
அக் கதவை சுமந்து திரிகிறான்.//

நீங்கள் கையாண்டிருக்கும் இந்த உவமையினையும், படிமத்தையும் கண்டு வியக்கிறேன், இவ்வளவு நாளும் என் கண்களுக்கு இந்தத் தளம், உங்கள் கவிதைகள் சிக்காமல் போய் விட்டனவே என்று வருந்துகிறேன்.

நிரூபன் said...

கர்த்தரின் நடுநெஞ்சில் இறங்கும்
கடைசி ஆணியென ஒலிக்கிறது
ஒரு நிராகரிப்பின் போது
மூடிய கதவினில் நகரும் தாழ்.//

அருமையான கற்பனை... இப்படியொரு குறியீட்டு விளக்கத்தை நான் படித்த கவிதைகளில் இது வரை கண்டதில்லை.

நிரூபன் said...

ஒரு புத்தகத்தின்
பக்கங்களை புரட்டும் சுவாதீனத்துடன்
மூடப் பெறும் கதவுகளையும்,
மயானத்தில் எரியூட்ட போகும்
ஒரு சிதையின் முகத்தை மறைக்கும்
கடைசி வரட்டியையும்,
ஒரே நேர் கோட்டில் கண்டு
திடுக்கிட்ட பறவைகள்
தத்தம் வாழ்நாளில்
கதவுகளை தட்டுவதுமில்லை,
வைத்துக் கொள்வதுமில்லை//

கவிதையின் இறுதியில் காலத்திற்கேற்றாற் போலத் தத்துவத்தினையும் உதிர்த்திருக்கிறீர்கள்.

நிரூபன் said...

கதவாயுதம், தமிழில் தவழ்ந்து, வார்த்தையெனும் புனலில் குளித்தெழுந்து, வண்ணமயமான படிமம் எனும் ஆடையினை அணிந்து எங்கள் பார்வைக்காய் விரிந்துள்ளது. வாழ்த்துக்கள் சகோதரம்.

கமலேஷ் said...

@நிரூபன்
உங்களின் முதல் வருகைக்கும்
வாழ்த்துக்களும் மிக்க நன்றி நண்பரே.

Yaathoramani.blogspot.com said...

மன நிறைவைத் தந்த கவிதை
பாதுகாப்புக்கென அணிந்து கொள்கிற உடைவாளைப்போல்
கதவும் ஒரு ஆயுதம்தான்.முகத்தில் அறைந்து மூடப்பட்ட
கதவின் கொடூரம் அதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......