Friday, March 25, 2011

சித்தார்த்தன் கனவு.

இந்த கவிதை
நடனமாடியபடி நகர்ந்து செல்லும்
சொற்களின் ஊர்வலமல்ல,
ஒவ்வொரு சுள்ளியாய்
கொண்டு வந்து கட்டிய
பறவையின் கூடும் அல்ல.

இந்த கவிதை
மொக்கவிழ்ந்த இந்நொடிகளின்
வாசனையல்ல,
கிழித்த நாட்காட்டியிலிருந்து வழியும்
இரத்தமும் அல்ல

இந்த கவிதை
கவிஞனொருவன் தன் இருப்பை வெளிப்படுத்த
சொற்களில் பீய்ச்சும் வெளிச்சம் அல்ல,
மேடை நடிகனொருவன்
ஒப்பனை கலையும்
அந்தரங்க அறையும் அல்ல.

இந்த கவிதை
இரு ஜோடி உதடுகளின் இடைவெளியில்
ஊறிக்கொண்டிருக்கும்
ஒரு முத்தத்தின் சுடரல்ல,
இன்னும் வெம்மையடங்காத
தகப்பனின் எரிந்த சிதையிலிருந்து
அஸ்தி சேகரிக்கும் ஒரு சிறுவனின்
நடுங்கும் மௌனமும் அல்ல.

விடிந்த பின்னரும் எரிந்தபடியிருக்கும்
அணைக்க மறந்த தெருவிளக்கின்
இரவை புணர்ந்த நினைவல்ல,
உச்சத்தில் முறியும் உடலல்ல,
காலமல்ல,..
கருணையல்ல...

இந்த கவிதை -

காற்றில்
சிறகு பதியாமல்
கடந்து போகும்
ஒரு பறவையின் சுவடுகள் ,

வேண்டுதல் எதுவுமற்ற
ஓர் பிரார்த்தனை,

உறங்கும் குழந்தையின்
சிரிக்கும் உதடுகள்.


அல்லது
எதிர்வரும் பாதசாரி
எதிர்பார்ப்பில்லாமல் வீசிப்போகும்
ஓர் மாசற்ற புன்னகை,


Wednesday, September 29, 2010

கதவாயுதம்

பறந்தபடி கிளை மீது வந்தமரும்
ஒரு பறவையின் மடங்கும் சிறகைப் போல
அத்தனை இயல்பாய் இருப்பதில்லை
நிராகரிப்பின் போது அடைக்கப்படும் கதவுகள்

அறைந்து சாத்தப்படும்
ஒரு கதவின் முன்னால் நிற்க வாய்த்தவன்
தன் வாழ்நாளெல்லாம் ஒரு சிலுவை போல்
அக் கதவை சுமந்து திரிகிறான்.

கர்த்தரின் நடுநெஞ்சில் இறங்கும்
கடைசி ஆணியென ஒலிக்கிறது
ஒரு நிராகரிப்பின் போது
மூடிய கதவினில் நகரும் தாழ்.


சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.

ஒரு புத்தகத்தின்
பக்கங்களை புரட்டும் சுவாதீனத்துடன்
மூடப் பெறும் கதவுகளையும்,
மயானத்தில் எரியூட்ட போகும்
ஒரு சிதையின் முகத்தை மறைக்கும்
கடைசி வரட்டியையும்,
ஒரே நேர் கோட்டில் கண்டு
திடுக்கிட்ட பறவைகள்
தத்தம் வாழ்நாளில்
கதவுகளை தட்டுவதுமில்லை,
வைத்துக் கொள்வதுமில்லை.

.

Thursday, August 12, 2010

முயலும் உலவும் காடு.


பதிவுலகில் நான் என்னும் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அப்பா ராஜாராமன், நண்பர் சீமான்கனி மற்றும் சகோதரி கயல்விழி அவர்களுக்கு நன்றி.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
கமலேஷ்

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
கமலேஷ்தான் உண்மையான பெயர்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
வெகுநேரமாய் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு
இம் மாட்டு தொழுவத்தின் கதவு திறந்தேன்.

யூதாஸுக்கு பயந்து ஓடி வந்த இயேசு
வெளியில் மூச்சிரைக்க நின்றுகொண்டிருந்தார்.

என்னவென்று நான் விசாரிக்க துவங்கிய கணம் -
தான் இவ்வுலகில் அவதரித்ததே முட்டாள்தனமென்று கூச்சலிட்டபடி
மீண்டும் மரியன்னையின் கருவறைக்குள் புகுந்து கொண்டார்.
(புரியலையில்ல, அப்படி ஒரு பிறழ்வுதான்)


4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
சரியாபோச்சி, பிரபலப்படுத்த நான் என்னங்க இங்க பிரஷர் குக்கரா விக்கிறேன். (அநியாயமான கேள்வி பாஸ் இது)

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஒவ்வொரு காகிததிற்குள்ளும் உறைந்திருக்கும்
மரத்தின் இரத்தத்தை போல்,
ஒரு இளைஞனின் கையிலிருக்கும்

சிகரெட் சூட்டு தழும்பில்
ஆழத்தில் கிடக்கும் ஒரு தாவணி போல்,
என் பெரும்பான்மையான வரிகளில்
நானே புரையோடியிருக்கிறேன்

காரணம்: ஒரே ஒரு சொல்லெடுத்து இவ் உலகை பூட்டிவிட்டு
தனியே ஒரு கவிதைக்குள் அமர்ந்து
சத்தமாய் அழவும், சிரிக்கவும், முணுமுணுக்கவும் பிடித்திருக்கிறது.


6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இரண்டும் இல்லை.

உச்சிப்பொழுதில், காய்ந்த வயிறுடன்
செருப்பில்லாத கால்களோடு
தள்ளாடி தள்ளாடி ஒரு தண்ணீர் தொட்டி நோக்கி நகரும்
கைவிடப்பட்ட அனாதை கிழவனின் கடைசி நிமிடங்களை
நான் என்ன செய்ய ?

இறந்து போன ஒரு பறவையின் சடலத்தை
இலகுவாய் கடந்துவிட முடியாத இதயத்தை
நான் என்ன செய்ய ?

தலை கருகி, உயிர் வற்றி
வாழ்க்கை முடியப்போகும் கடைசி தருணத்தில்
நல்லெண்ணெய் இட்டு,

திரியை தூண்டிய சிறுமியை நோக்கி
நன்றி கலந்த வெளிச்சத்தோடு
கை கூப்பியபடி
எரியும்
ஒரு மாடவிளக்கை
நான் என்னதான் செய்ய?

அத்தகைய தருணங்களில் நான் செய்வது
வக்கிருந்தால் கிழவனுக்கு ஒரு பிடி சோறு,
பறவைக்கு ஒரு சொட்டு கண்ணீர்,
சிவனாகிய சிறுமிக்கி - இரு வரி கவிதை.


7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
நான் ஒத்தப் பிள்ளை பெத்தவங்க.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
இரண்டும் பதிவுலகிற்கு வெளியில் உண்டு.

எண்ணை பிசுக்கு மற்றும் குங்கும வாசனை கலந்துலவும்
கலை நயமிக்க கோவில்களை காணும்போது பொறாமையும்,
தேவையில்லாமல் அங்கே உபரியாய் அமர்ந்திருக்கும்
தெய்வங்களை காணும்போது கோபமும் வருவதுண்டு.



9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?
முதல் பின்னூட்டத்தின் மூலம் கைகுலுக்கியவர் - நம்ம தலைவர் D .R .அசோக் .

நேரில் பாராட்டியது அறை நண்பன் ஸ்ரீதர்.
(இரவு பணி முடிந்து வந்து அசந்து தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி பாராட்டினான். பாவிப்பய.)

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.
அனைத்துமா, கூறலாமே...

என் இவ்வருட டைரியின் முதல் பக்கத்தில் கவிஞர் கார்த்திக் முருகனின்
இந்த கவிதையை எழுதி இருக்கிறேன்.இப்படி இருக்கவே ஆசையும்படுகிறேன்.


கூடடைய விரும்பாததொரு
கரும் பறவை

இரை தேடிச் செல்லும்
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகளை
பிரசவித்துச் செல்கிறது.

பூச்சரம் போல முழம் முழமாக நீண்டு கொண்டே போகும் இத் தொடர் பதிவில் நான் முடிய நினைக்கும் மல்லிகைகள்

மார்க்கண்டேயன்.
வினோத் நிலா
,

geetha
மற்றும்
hemikrish .

.

Tuesday, July 20, 2010

வலியோடு கலையும் கனவு

வெயிலும், மழையும்
புனையலாடி திரியும் பொழுதொன்றில்
பிரசவிக்க துவங்கிய
வானவில்லின் அடிவாரத்தில்
காத்திருந்தேன்
என் ராஜகுமாரனுக்காக

சொட்டும் வர்ணங்களிலிருந்து
இறங்கி வந்தவன்
என் விரல்களைப் பிடுங்கி கொண்டு
ஓர் வீணையைப் பரிசளித்தான்.

கனவுகள் இறைக்கும் இதயத்தோடு
அவனை அழைத்துப்போய்
ஆர்ப்பரிக்கும் என் கடலை
அறிமுகப்படுத்தினேன்.

ஒரே மடக்கில்
அக் கடலை எடுத்துக் குடித்தவன்
வறண்ட பாலைவனத்தை வீசியெறிந்தபடி
அலட்சியமாய் செருமிக் காட்டினான்.

கண்ணீர் அவிழ்ந்து
காட்சிகள் உடையும் கண்களுடன்
மெல்லிய விசும்பலோடு
இது என் வானம் என்று
ஊனக்கைகளை உயர்த்திக் காட்டினேன்.

சூரியன் உதிரும் அளவிற்கு
அதை எடுத்து உதறியவன்
கக்கத்தின் வியர்வையைத் துடைத்தபடி
என்னை பழிக்கத் துவங்கினான்.

வேர்களைப் பொசுக்கும் நெருப்பில்
பொறுமையிழந்து வெடிக்கும்
மூங்கில் காடென
இது என் நீண்ட பெருவனம்
இதை நீ என்செய்வாய் என்றேன்.

ஒரு வாத்துக் கூட்டத்தை மேய்ப்பவன் போல
தன் கைத்தடியால்
மொத்த மரங்களையும் விரட்டியடித்தவன்
பொட்டல் வெளியில் நின்று
பலமாய் சிரிக்கத் துவங்கினான்.

இறுதியாய் வேறு வழியின்றி
என் சிறகிலிருந்து
இரத்தம் தோய்ந்த இறகொன்றைப் பிடுங்கி
மெல்லிய புன்னகையுடன்
அவன் கையில் கொடுத்தேன்.

கனம் தாளாமல்
சரியத்துவங்கினான்.

.

Monday, July 5, 2010

தோற்றப் பிழை.

வேட்டைக்கு வந்த நீங்கள்
மானோ, புலியோ
எதுவும் கிடைக்காத பட்சத்தில்
கனத்த மவுனத்தோடு திரும்பியிருக்கலாம்.

வெறுங்கையோடு திரும்பும்
வேட்டைக்காரனின் கெளரவம் குறித்து
யோசிக்கும் உங்கள் கண்கள்
அதோ ஓர் பறவை என்றதும்
குதூகலிக்கிறீர்கள்

உங்களின் சின்ட்ரெல்லா பொம்மைக்கென
என் சிறகுகளை பிய்த்துக் கொள்கிறீர்கள்.

உங்கள் தொட்டி மீனின்
இரைக்கு உதவுமென
நீலம் பாரித்த என் கண்களை
பிடுங்கி கொள்கிறீர்கள்.

என் கூடு அமைந்திருக்கும் கிளை
மகனின் கவன் வில்லுக்கு
சரியான கவட்டையென
உங்களின் கோடாரி முடிவெடுக்கிறது.

உங்களின் செய்கைகள் எதையும்
நான் தடுக்காதது குறித்து
ஆச்சர்யமாய் யோசிக்கிறீர்கள்

பின்
கோபமாய் அந்த கிளையை
வெட்டி வீழ்த்துகிறீர்கள்.
என்னை திரும்பி பார்க்கிறீர்கள்.

நான் பாடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு பறவைக்கு இத்தனை திமிராயென்று
என்னை தரையோடு தேய்த்துவிடும்
நோக்கத்தில்
உங்களின் பாதங்கள் நெருங்குகின்றன.

இப்போதும் உங்களை நான்
தடுக்கும் உத்தேசமில்லை

ஏனென்றால்...

நான் பறவை இல்லை.

.

Wednesday, June 23, 2010

மஞ்சள் தடவிய மரணப் பத்திரிக்கை.

உன் மௌனம் பாய்ந்து
சிதைந்து போன
என் இதயத்தின் துணுக்குகளை
சேகரித்துக் கொண்டே கேட்கிறேன்.

அதற்க்கு முன்
உன் நாசியினில் ஓர்
கைக்குட்டையை கட்டிக் கொள்.

ஏனெனில்
உன்னால் காயம் பட்ட
என் சுவாசப் பைகளிலிருந்து
இரத்தத்தின் வாடை வீசக் கூடும்.

*
நரமாமிசம் தின்னும்
இந்த செவிட்டு உலகின் பிடியிலிருந்து
என்னை ரட்சிக்கும் பொருட்டு
நம் நிறை மாத சிசுவை
இரையிடுகிறேன் என்கிறாய்.

நீரிலிருந்து ஈரம் கழித்த பின்
பாவி ! மிச்சமென்னடி
இன்னும் மிச்சம்.

ஒற்றை சிறகை இழந்த பறவை
முறிந்த கிளையில் அமர்ந்து
உறைந்த முகாரியை
எத்தனை காலம் இசைக்குமென
எண்ணித் துணிந்தாயா இக் கர்மம்.

இதோ -
துடிக்க துடிக்க
என் காதலை புசிக்கிறது பார்
உன் பெரு மௌனம்.

*
சலனமற்று நீ நீட்டும்
இந்த உன் மண ஓலை
உறையிடப்பட்ட எனது கல்லறை

நடுங்கும் விரலோடு
மெல்ல மயானத்தின்
கதவுகள் திறக்கிறேன்.

அங்கே அச்சிடப்பட்டிருக்கிறது
என் மரணத்தின் தேதி.

*
இக் கவிதையின்
இறுதி ஊர்வலத்தில்
எதிரொலிக்கும் பறையோசையில்
உனக்காக நான் விட்டு போவது
ஒற்றை குறிப்பை மட்டும்தான் தோழி.

என் தீர்ப்பின் முற்றுப் புள்ளியில்
நீ ஒடித்த பேனா முனையென
உன் இமையிலிருந்து
ஒரு சொட்டுக் கண்ணீர்
எனக்காக முறியுமெனில்
உன்னை மன்னித்ததின் அடையாளமாய்
எரியும் என் சிதையிலிருந்து
பிறண்டு விழும் ஓர் விறகு.

.

Saturday, June 19, 2010

நீ தந்தவை...



உன் சிவந்த உதடு பிரித்து
நாவை வெளியில் நீட்டி
சுழற்றுகிறாய்.
பொறி தட்டிய பிரம்மன்
மையத்திலாடும் மகரந்தத்தோடு
செய்ய துவங்குகிறான்
ஒரு செம்பருத்தியை.

*
குளித்தது போதுமென்று
நீ கரையேறி விட்டாய்.
திரும்பி பார்.
உன்னை பிரிய முடியாமல்
பின்னால் ஓடி வருகிறது
நதி.

**
சுழித்துக்கொண்டோடும்
இந்த வரிகளும்,
இந்த வரிகளின் படுகையில்
படிந்து கிடக்கும் வலிகளும்,
உனக்கு சொந்தமானவை.
ஏனென்றால்
இவை
நீ தந்தவை.

.