Thursday, November 26, 2009

ஒரு அட்சய பாத்திரம் பற்றி...

இவ்வுலகம் வியந்து பார்க்கும் விசயங்களில் இன்னுமொன்று
- வைரமுத்து -
அந்த ஆழ்கடலில் ஆர்பரிக்கும் கவிதைகளை ரசித்து, மயங்கி கிடக்கும் கரையில் நானும் ஓர் மண் துகள்.




தமிழன்னை பெற்றெடுத்து,
இலக்கியம் தத்தெடுத்த வைரவா
உன் வாழ்வில்
நீ அறியா சில ரகசியங்கள்
உன் ரசிகன் சொல்கிறேன் கேள்.

நிறை மாத கருவாய் நீ,
நிறை மாத கர்பிணியாய் உன் தாய்,
வயிற்றில் தீராத கூசலை
என்னவென்று சோதித்தாள் -
அவளின் கற்பபை சுவர்களெல்லாம்
நீ கவிதைகளை கிறுக்கி கொண்டிருந்தாய்.

புதையல் என்றால்
புவியுள்தான் என்றிருக்க
நீ மட்டும் கருவழி வந்தாய்.

இவ்வுலகில்
இரண்டு நிலாக்கள்
இரண்டு சூரியன் உண்டென்பேன்
நிரூபிக்க வேண்டுமெனில்
உன் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு
நீயே நின்று பார்.

இதுவரை
தீ மட்டும்தான் சுடும் என்றிருந்தேன்,
உன் கவிதைகள் காணும் வரை.

பனித்துளியின் தலையில்
மின்னல் நட்டு வைக்கிறாய்..
பூமி பந்திற்கு நிலவை பொட்டு வைக்கிறாய்
மேகம் குளிர வானம் போர்துகிறாய்.
கவிதை பாத்திரத்தில்
பிரபஞ்சமே சமைக்கிறாய்.

நீ முற்று புள்ளி வைத்த
இடங்களெல்லாம் கொட்டிக்கிடக்கிறது
விஞ்ஞானமும், மெய்ஞானமும்.

உன் காலங்களில் வாழ்வதனால்
என் பிறவிகூட அர்த்தப்படும்.

இன்று
உனை படைத்த பிரம்மனே
உன்னை நோக்கி தவம் இருக்கிறான்.
அவன் காதலிக்கு தர
உன் கவிதை ஒன்று வேண்டுமாம்.
மறுக்காமல் வரம் கொடு.

.

Sunday, November 22, 2009

நானும்,என் கவிதைகளும்.....

என் கவிதைகள் -
குழந்தைகள்
இன்னும் நடை பழகாதவை,
இப்பொழுதுதான்
வரிகளின் விளிம்புகளை பிடித்துக் கொண்டு
எழுந்து நிற்க முயற்சி செய்பவை
அவை தவறி விழும் எனில்
எள்ளி நகைக்காதிர்கள்.

என் கவிதைகள் -
இன்னும் இரசம் பூசாத
கண்ணாடி ஊடகங்கள்
தெளிவான பிம்பங்களையும் கூட
சரியாக பிரதிபலிக்க தெரியாதவை
எனிலும்
உங்கள் விமர்சனங்கள் கொஞ்சம்
கடுமையானதாக இருப்பின்
அதன் மீது வீசி உடைக்காதீர்கள்.

என் கவிதைகள் -
ஓர் இரவு பாடகன்
மலிந்த வெளிச்சத்திலும்,
இரவுகளின் தெருக்களில் மட்டுமே
பாடி திரிந்தவன்.
கல்யாணி ராகத்திற்க்கும்,
முகாரி ராகத்திற்க்கும் வித்தியாசம் தெரியாத
சுத்த தன்யாசி.
என்றாலும்
இவன் சங்கீதத்திற்கு யாரும்
இரங்கல் தெரிவிக்காதிர்கள்.

- கமலேஷ் -

.