Sunday, December 27, 2009

அவளின் காதல் கதை...

தட்டிலிருந்து தவறி விழும்
இறைச்சிக்காக
சுற்றிவரும் நாயின் நாக்கில்
டிராகனின் உக்கிரம் -
அவன் காதல்.

வேதாளத்தின் விடுகதைக்கு
விடை சொல்லபோய்
பந்தயத்தில் தோற்கிறாள் -
பாடலிபுரத்து பேசா மடந்தை

காதலின் தாழ்வாரத்தில்
ஒதுங்கிய வெண்புறாவை
வன்புனர்கிறது -
மலைபாம்பு

குறவனின் கையிலிருக்கும்
தேன்கூட்டின் மிச்ச சக்கை;
தாகம் தீர்ந்ததென
தூர்க்கப் பட்ட ஓர் கிணறு

விண்ணை நோக்கி எறியப்பட்ட
ஒரு கல்
மீண்டும் மண்ணில் விழுந்து
சலனமற்று போனது...
திசைகளை களவு கொடுத்த
கட்டுமரம்
அலைகழிகிறது
காற்றின் போக்கில்...

அணையும் தருவாயிலிருக்கும்
மாட விளக்கொன்றிர்க்கு
நல்லெண்ணெய் இட்டு
திரியை தூண்டுகிறாள்
சிறுமியொருத்தி...

போதிமரத்தின்
அடியில் மேயும்
பெட்டை மயிலின்
கையிலிருக்கிறது
உலகை அழிக்கும்
சாபம்

எச்சரிக்கை -
வெள்ளிகிழமை நடுநிசியில்
வேட்டைக்கு போகும்
ஒத்த பிடாரியை வழிமறித்தால்
நீங்கள் இரத்தம் கக்கி
செத்து போவீர்கள்

.

Wednesday, December 23, 2009

அரூபமானவன்...

விழாவில் நுழைந்த எனக்கு
ஆச்சர்யமாய் இருந்தது..

அவர்கள் கண்களுக்கு
நான் புலப்படவே இல்லை
அக் கூட்டத்தில்
ஒரு கழுத்தைக் கூட
திருப்பவில்லை எனது குரல்.
சில மனிதர்கள்
என் உடலை ஊடுருவி
கடந்து போகிறார்கள்.
நிறைந்து வழியும்
அரவத்தின் மத்தியிலும்
என்னை சுற்றி மிதக்கிறது
ஒரு தனிமையின் ஏகாந்தம்.
அவர்கள் கண்களிலிருந்து நான்
மொத்தமாய் மறைந்து போயிருந்தேன்
நான் ஆவியாகி
போனேனோயென பயந்து
கண்ணாடி பார்க்கையில்
என் பிம்பத்தின் மீது
எழுதப்பட்டிருந்தது
தனக்கென்று
அடையாளமில்லாதவன்
அரூபமானவனென்று' ...
.

இலக்கண கனவு...

ஒரு மொட்டை மாடி உறக்கத்தில்
பொத்தல் வழி உள்ளிறங்கிய கனவு
கட்டி தர தீர்மானித்தது
எனக்கொரு கவிதை...

சகல தளவாடங்களையும்
சேகரித்த கனவு
திருப்பாவையின் இறை வாழ்தொன்றை
கசிந்துருகி பாடி
தொடங்கியது கட்டுமானத்தை...

காற்றில் தளும்பும் சொற்கள்
காகிதத்தில் வழியும் வரை
பொறுமை இல்லை...

முட்டி தள்ளுகிறது
மொத்த கலனையும்...

சரிந்தோடுகிறது
இலக்கணங்கள் யாவும்...
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியென
சிதறி போயின ஐந்தா பக்கமும்...

"கடகடவென" ஓடி ஓர்
இரட்டை கிழவியை கையில் எடுத்த கனவு
அதை லாவகமாய் பொருத்துகிறது
வரிகளுக்கிடையில்...

இன்னிசையளபெடையிலிருந்து
சில ஓசைகளை எடுத்து
கவிதையின் சுவர்களை எழுப்புகிறது...

நிலை மொழியின் ஈற்றெழுத்தும்
வரு மொழியின் முதலெழுத்தும்
இணையும் பொழுதெல்லாம்
வெட்கத்தில் கண்கள் பொத்திக் கொள்கிறது..

விசாரித்து பார்த்ததில்
பொருளிலக்கனப்படி அவை
சொற்களின் புனர்ச்சியாம்...

தனக்கு இலக்கணத்தோடு கொஞ்சம்
இங்கீதமும் தெரியுமென்று சொல்லி
சிரிக்கிறது...

அணியின் அடியில் சிக்கி கிடந்த சில
சிலேடைகளை கண்டு துணுக்குற்று
அதையே கவிதையின் கூரையாக வேய்ந்து
சொல்லுருபுகளால் இறுக்கி கட்டுகிறது...

உயரம் எட்டாத இடங்களில்
அடுக்கு தொடரை இழுத்து போட்டு
ஏறுகிறது...

வல்லினம் மிகும் இடங்களை
செல்லமாய் தலையில் குட்டுகிறது,
ஈறுகெட்ட எதிர்மறை சொற்களை
தொடையில் கிள்ளுகிறது...

ஐகார குறுக்கத்தில் ஜன்னல்
ஈற்றடியில் கதவு
மரபுத் தொடரில் படிகள் என
எல்லாம் முடிந்த களிப்பில்
தன் நெற்றியில் துளிர்த்த சில
முற்றுப்புள்ளிகளை விரல்களால்
வழித்த கனவு - அதை சுண்டுகிறது
என் உறக்கத்தின் மேல் ...

சட்டென முகத்தில் விழுந்த
துளிகளின் குளிர்ச்சியால்
திடுக்கிட்டு விழிக்கையில்...

பொட்டல் வானத்தில்
நட்சத்திரங்களாகி போயிருந்தன
சொற்கள் யாவும்...

கவிதையாக
தூரத் தொடங்கியிருந்தது
மழை..

- கமலேஷ்.கி -

.

Saturday, December 19, 2009

காதலின் பக்கங்கள்...


இதுவரை காதலை பற்றி எத்தனையோ கவிஞர்கள் எழுதி தீர்ந்த போதிலும் இன்னும் பல கோடி பக்கங்கள் வெறுமையாய்...அத்தகைய காகிதங்களின் வெற்று உடல்களுக்கு என்னிடமிருந்தும் சில கவிதா சட்டைகள்...

காதலின் உலகத்தை சில வரிகளுக்குள் அடக்கிவிட முடியாதுதான் என்றாலும் தலைக்கு மேல் இருக்கும் சில சொற்களை எக்கி பறிக்க முயலும் ஒரு குழந்தையின் முயற்சிதான் இது...

இவ்வுலகில் மார்தட்டி நின்றவையனைத்தும் தன் பொலிவை இழந்து இன்று அழுகிறது... அதில் காதல் மட்டும்தான் இன்னும் காதலாகவே நின்று சிரிக்கிறது..
வளர்ந்து வரும் நாகரீகத்தில் சருகாய் போன மானுடத்திலும் இன்னும் காதலின் பக்கங்கள் மட்டுமே ஈரம் தாங்கி நிற்கின்றன..

இதுவரை காதல் விண்டு செரிக்காத துறைகள் எதுவுமே இல்லை..
அம்பிகாபதி அமராவதி காவியங்களில் துவங்கி
காரல்மார்க்சின் தத்துவங்கள் வரை
கலை,விஞ்ஞானம்,ஆன்மிகம், வரலாறுயென
அத்தனையும் தின்று தீர்த்து விட்டன...

- இனி மிஞ்சியிருப்பது காதல் மட்டும்தான் -

மிரட்டும் கடலையும் தன் கால்களால் இறைத்து
தூர்த்து விட முனையும் வீரம் காதலில் மட்டுமே சாத்தியம்...

எங்கள் புலவனின் தெருக்களில் காதலின் பிரச்சாரங்களே சற்று வேறுதான்...

எழுந்து வா புத்தா
இவளை பார்
இப்போது ஆசை துற... - என சித்தார்தனையே சவாலுக்கு அழைக்கிறான்
காதலில் மோட்சம் பெற்ற ஒரு கவிஞன்..

உம் என்று சொல் காதலி
உனக்காய் கம்பனை கூட்டி வந்து கவி பாடுகிறேன் - என
வரலாற்றை திருப்பி இறந்தவனை எழுப்புகிறான் ஒரு காதலன்..

- அவளின்றி ஓர் அணுவும் அசையாது - என
விஞ்ஞானத்தையே வியக்க வைக்கிறான் மற்றொருவன் ...

காதல் - ஒரு கடல்
இங்கு கால்கள் கூட நனைக்க முடியாத ஒருவன்
கரையில் அழுது புரள்கிறான்..
அதில் முன்னேறிய ஒருவன் ஆனந்த குளியல் போடுகிறான்...
ஒருபுறம் அக்கடலையும் கடைந்து
அமுதம் கண்டவன் கையில் கொண்டு ஓடுகிறான்...
மறுபுறம் ஒருவன் கண்ட நஞ்சை தானே உண்டு சாகிறான்...

காதல் ஏறியவனுக்கு எவரெஸ்ட் என்றால்
இடறியவனுக்கு மிசெளரியின் பள்ளத்தாக்கு...

வசந்த வனத்தின் வாசலென்றால்
மயானத்தின் மையம்,
முன்னேற்றத்தின் முதல் படி,
மரணத்தின் கடைசி எச்சரிக்கை...

காதல் இறந்தும் வாழும்
முதல் சரித்திரம்...

இங்கு உண்பதை விட
உண்ணப்படுதல் சுகம்...

இங்கு விளக்கும் நாங்களே
விட்டில் பூச்சுகளும் நாங்களே..

எங்களில் தீபமும் உண்டு..
தீப்பந்தமும் உண்டு..

மீனுக்கிட்ட தூண்டிலில்
மீனவனே சிக்கும் விந்தையும் உண்டு...

விளங்க சொன்னால்
இங்கு
நாங்களே தச்சன்...
நாங்களே சவப்பெட்டி...
நாங்களே சடலம்...

இன்னும் வரம்புக்குட்படாத
எத்தனையோ வரையறைகள்...

- காதல் தொடரும் -

- கமலேஷ்.கி -

Tuesday, December 15, 2009

எனது டீன் ஏஜ் கவிதைகள்...

என் இருபதுகளில் எழுதப்பட்ட கவிதைகள் இவை... சிறுபிள்ளைதனம் கொஞ்சம்.... இல்லை, நிறையவே இருந்தாலும் தூக்கியெறிய மனமில்லை...


உன் விழிகளை வெல்லும் கவிதையை
எழுத முடியாமல்
தோற்றுக்கொண்டே இருக்கிறது
என் தூரிகை...


பிரகாரம் சுற்றும் சிறுமியொருத்தி
உனக்கும் அம்மனுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
சட்டென
உன்னை கையெடுத்து கும்பிடுவதைப் பார்த்து
கைகொட்டி சிரிக்கிறது
என் காதல்....

நான் அழுவதை
நீ பார்த்துவிடக்கூடாது
என்றுதான் நினைக்கிறேன் -
ஆனால் என்ன செய்ய ???
நீ என் கண்களாக அல்லவா இருக்கிறாய்...

நீ வந்த போது உணராத
என் சூரிய உதயத்தை
நீ சென்ற பிறகு உணர்த்தியது
என் அஸ்தமனம்...


அசைவின்றி இருக்கிறது
உன் இதழ்கள்
ஆனால்
உன்தன் மௌனம் மட்டும்
எதையோ சப்தமாய் பேசுகிறது
என்னோடு...


உன்மேல் உள்ள காதலின்
உச்சத்தை சொல்ல முடியாமல்
வார்த்தைகளோடு
போரிட்டுக் கொண்டிருக்கிறேன் நான்.
ஆனால் எந்த சிரத்தையுமின்றி
சொல்லிவிடுகிறாய் நீ -
உன்தன் ஆழமான
ஒற்றை பார்வையால்...

இன்று பூத்து குலுங்கும்
என் இதயம்
நீ முத்தமிடுவதற்கு முன்
மொட்டுகளாய் இருந்ததாய் ஞாபகம்.....


Saturday, December 12, 2009

ஒரு பிரிவின் கடைசி கணங்கள்...

.

நீ வழியனுப்பு என்று சொன்ன
அந்த ஒற்றை வரியின் கணுவில்
சிக்கி கிழிகிறதென் மனது....

இன்னும்.... இன்னும்.....
ஒரு நொடிதான்
உடைந்து விடும்
கண்ணீரோடு சேர்ந்து
உயிரின் ஒரு துளியும்...

உச்சரித்துவிட்டு உலர்ந்து விட்ட
உன் உதடுகளின் அடிவாரத்தில் அமர்ந்து
சப்தமாய் அழுகிறது என் காதல்...

தவிப்பின் விளிம்பில் தள்ளாடும்
உன் பலகீன புன்னகையின்
அர்த்தம் புரிந்த உடன்
உயிரின் வேரறுக்க தொடங்கிவிடும்
வழியென்னும் கொடுவாள்...

கடைசியாய் நீ என் கரம்பிடித்து
வரட்டுமா என்ற அழுத்ததிற்குள்தான்
உன் நினைவுகளை கட்டியணைத்த படியே
செத்து கிடக்கிறது என் உலகம்...

உன் பிரிவினை சொல்ல
உனக்கு வார்த்தை கிடைத்துவிட்டது...
ஆனால் என்தன் வலியினை சொல்ல வரிகளின்றி
இன்னும் தேடியலைகிறது இக்கவிதை....
.

Tuesday, December 8, 2009


மெய்பொருள் காண்பதறிவு......

கொடிமரத்தை பற்றியதொரு
கவிதை எழுதியிருந்தேன்.
கவிதையில்
வந்தமர்ந்த ஓர் பறவை
வெகுநேரம் எதையோ தேடிவிட்டு
பறக்கும் போது சொன்னது,
உன் மரத்தில்
பழங்களே இல்லை....

(எனக்கு பிடித்தமான கவிஞர் ஒருவரின் எழுத்துக்கள், சில தினங்களுக்கு முன் காயம்பட்ட பொழுது அவரின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கவிதை இது... வரிகளுக்கு சொந்தக்காரன் நான் எனிலும் படுபொருள் அவருக்கே உரித்தானது...)

-------------------------------------------------------------------------------

குரல்

பிடிப்பு தளர்ந்த
பேருந்தின் இருக்கை
வழி நெடுகிலும் பேசுகிறது
கிளியின் பாஷை..
பறவையின் மொழி
தெரியாதெனினும்
என் கவிதைக்கு
கிடைத்ததொரு குரல்...

----------------------------------------------------------------------------

கவிதையும் தருவாள்
....

வார்த்தைகள் மறுதலித்து
தூக்கம் தின்று கொண்டிருந்த
கவிதையிடம் கோபமாய் கேட்டேன்.

உனக்கு என்னதான் வேணும்.????

ஊனமில்லாத உண்மை,
அழுக்கில்லாத அன்பென்றது.

"அம்மா" என்று எழுதிக்கொடுத்தேன்

அருகில் படுத்து அமைதியாய்
உறங்கிப்போனது...

.

Friday, December 4, 2009

தாவர உண்ணி....


கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்...

கழுத்தறுபடும் ஆட்டின் வலியை
உணர்வதேயில்லை
மிதிபடும் செடிகளில் எப்போதும்...

வேலங்குச்சியில் பல் துலக்க
பல நேரம் முறித்து விடுகிறோம்
மரத்தின் விரல்களை...

கொஞ்சம் உற்று பாருங்கள்....

உங்கள் கூந்தலை அலங்கரிப்பது
ஒரு தாவரத்தின் கண்களாய் இருக்கலாம்...

நீங்கள் பிடுங்கி நட்ட நாற்றில்
ஒரு புணர்ச்சி பிரிந்திருக்கலாம்..

இதோ
பசு மரத்தில் அடிக்கப்பட்ட ஆணி -
இன்னுமொரு இயேசு அறையப் பட்டிருக்கலாம்....

கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்..

விழாவுக்கென வெட்டப்பட்ட குலைவாழை
மடிந்திருக்கிறாள்
பூப்பெய்திய பெண் ஒருத்தி....

செரிக்கப்படும் விதைகளோடு
முடிந்து போகிறது
சில கோடி தலைமுறைகள்...

குழந்தை கிள்ளிய இலையின் காம்பில்
வழிகிறது ஒரு யாக்கையின் இரத்தம்...

நீங்கள் இறுக்கி கட்டிய கொடி கம்பி
நெருக்குகிறது ஒரு உயிரின் சுவாசம்...

உண்மையில் கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்...


- கமலேஷ்.கி -

குறிப்பு : (இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).



Tuesday, December 1, 2009

ஈடில்லா இழப்பு...



காலை எழுந்ததும் நாளிதழ் புரட்டினேன்,
இன்று இழப்பு என்றதென் ராசிபலன்....

எதையும் இழப்பதில்லையென
சூள் கொண்டேன்...

போர்களங்களின் சாலைகள் விலக்கினேன்-
அமைதியை இழந்து விடக்கூடாதென.....

கோபங்களை புன்னகையில் புதைத்தேன்-
நிதானத்தை இழந்து விடக்கூடாதென.....

வார்த்தைகளின் கையில்
பூக்களை கொடுத்தேன்-
உறவுகளை இழந்து விடக்கூடாதென...

குருட்டு வாகனங்களின்
முரட்டு சாலைகள் தவிர்த்தேன்-
உயிரை இழந்து விடக்கூடாதென...

மலை முரசு ஒன்று செய்தி தாங்கி வந்தது -
..
" கொலம்பியா விண்கலம் நடுவானில் வெடித்து சிதறியது..
கல்பனா சாவ்லா உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர் "

ஜோதிடம் ப.லி..த்...தே வி.ட்..ட...து.....
.
.
.
என் பழைய டைரி குறிப்பிலிருந்து -
பிப்ரவரி,01, 2003
கமலேஷ்.கி