Wednesday, May 19, 2010

தடாக குறிப்புகள்...

குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து
பூத்திருக்கிறது தாமரை.

இன்னும் மலராத மொட்டுக்கள் சில
ஆடிக்கொண்டிருக்கின்றன,
கட்டிலில் குலுங்கும்
பெண்ணின் தனங்களையொத்து.

தன் மேல் கிடக்கும் துளிகளை
நட்சத்திரங்களாக்கி உருட்டி விளையாடுகின்றன,
தடாக புரசை இலைகள்.

குளத்தில் கிடக்கும் சூரியனை
அலகில் கொத்தி கொண்டு பறக்கிறது,
பெரும் பசி கொண்டதொரு
மீன்கொத்தி.

நீரில் நகரும் மேகத்தின் இடுக்குகளில்
ஓயாது சலம்பிக் கொண்டேயிருக்கிறது,
மின்னலை பூசிக்கொண்ட
மதம் பிடித்த மீன் ஓன்று.

அட்டை இல்லா புத்தகமென
திறந்து கிடக்கும் இக் குளக்கரையில்
புல்லாங்குழலேன இசைக்க துவங்குகிறேன்
ஒரு சிகரெட்டை.

சட்டென நீரிலிருந்து
யாழதிர படி ஏறிப்போகும் கவிதையொன்றின்
செழிப்பான தேகத்திலிருந்து
சொட்டிக் கொண்டே இருக்கின்றன
இச் சொற்கள் யாவும்.

.

Monday, May 3, 2010

இலந்தை பூக்கள்...

தோழி கயல் விழி சண்முகம் அவர்கள் "பதின் வயது நினைவுகள்" என்னும் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அடர்த்தியான வேலை பளு, அதன் தொடர்ச்சியாய் அடிவயிற்றில் நிகழ்ந்த ஒரு அறுவை சிகிச்சை. இப்பொழுதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறேன். ஆதலால் தாமதத்திற்கு தோழி மன்னிக்க...

பதின்ம வயது என்றதுமே எனக்குள் வந்து போவது....

- "நாண் அறுந்த ஒரு யாழ்" -

இப்பொழுதும் கூட அதனை இழுத்துக் கட்டி இசைக்கலாம்தான், என்றாலும் என்னிடத்தில் தற்போது விரல்கள் இல்லை. பெரும்பான்மையான கவிஞர்களின் பேனா மூடியை ஏதோ ஒரு தேவதைதான் திறந்து வைத்திருப்பாள். அப்படியே ஒருவள் என் ரோமின் தெருக்களிலும் பாடித் திரிந்தாள்.

இடம் : மாரகுடி வரப்பு
வருடம் : மங்கலாக இருக்கிறது...


நான் வேட்டைக்கு போன இலந்தை மரத்தின் அடியில் அந்த சிறுமி நின்று கொண்டிருந்தாள். வெகு திருத்தமான முகத்தில் நெடு நேர தேடலின் களைப்பும், எதுவும் கிடைக்காத வெறுமையும் பரவிக் கிடந்தது. நான் அவளை சற்று தள்ளியிருந்த மரத்தின் தணிந்த கிளைகளை லாவகமாய் பற்றி பலமாக உலுக்க துவங்கினேன். சட சடவென பழங்களும், காய்களுமாய் விழும் இசையை கேட்டு ஓடி வந்தவள் நான் முறைத்து பார்க்கவும் அப்படியே உறைந்து போய் நின்றாள். நான் மேலும் சில கிளைகளை உலுக்கி தயாராய் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையை கர்ப்பவதியாக்க துவங்கினேன். என் எதிரே வந்து நின்றவள் மெல்ல மெல்ல சொற்களை அவிழ்த்தாள். இதை ஸ்கூல்ல காசுக்கு விப்பீங்களா?.... குரலில் ஒரு மழலை இருந்தது. அவளின் கேள்விக்கு அர்த்தம் புரிந்தவனாக ஐந்தாறு பழங்களை அள்ளி அவள் கையில் கொடுத்த படி நீ எந்த ஸ்கூல் என்றேன். நீங்க படிக்கிற அதே ஸ்கூல்தான் என்று சொல்லவும் நான் ஆச்சர்யமாகி என்னை இதுக்கு முன்பே உனக்கு தெரியுமா என்றேன் . சட்டென உற்சாகமானவள், ம்...சாயங்காலம் பிரேயர்ல நீங்கதான டெய்லி குறள் படிப்பீங்க என்றாள். தான் அதே ஸ்கூலில் ஐந்தாவது படிப்பதாகவும் பெயர் தேவிகா என்றும் சொன்னவள் இரை தேட சென்ற பறவை போல மீண்டும் தன் கேள்விக்கே திரும்பினாள். நீங்க இதை ஸ்கூல்ல காசுக்கு விப்பீங்களா???? இல்ல, இதை என் தம்பி தங்கச்சிக்கு எடுத்திட்டு போறேன் என்றேன். மிகவும் தயக்கத்தோடு எனக்கும் இரண்டு தங்கச்சி இருக்கு, அதுங்களுக்கும் அஞ்சஞ்சி பலம் தருவீங்களா???? என்றாள். அவள் இழுவையில் இருந்த அந்த இசை குறிப்பு இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் சரி, வாங்கிக்க என்றதும் சட்டென நீலப் பாவாடையை பாத்திரமாக ஏந்தினாள். நான் பையில் இருந்த பழங்களில் கணிசமான ஒரு பகுதியை சரிக்க இதை சற்றும் எதிர் பாராதவள் விழிகள் விரிய நாளைக்கும் நீங்க இங்க வருவீங்களா என்றாள். நான் "ம்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிறகு தரித்த மான் குட்டியாக அவள் வீட்டை நோக்கி ஓடத் துவங்கி இருந்தாள். அதுவரை காய்களும், பழங்களும் மட்டுமே இருந்த இலந்தை மரத்தில் அன்றுதான் நண்பர்களே நான் பூக்களை கண்டேன்.

மறுநாள் அதற்கு பக்கத்திலிருந்த தூங்குமூஞ்சி மரத்தின் நிழலில் சனல் சாக்கை விரித்து, வைக்கல் பிரியை தலைக்கு கொடுத்தபடி பள்ளி கொண்ட ரெங்கநாதனாக ராணி காமிக்ஸ்குள் மூழ்கி போயிருந்தேன். சட்டென தலை பக்கமாய் மூச்சிரைக்க ஓடி வந்து அமர்ந்தவள் எனக்கெதிரே மூடிய கைகளை நீட்டி, பின்பு மெதுவாக விரித்தாள். "சில நெல்லி கனிகள்". இங்கு..இங்கு... இங்குதான்.... நண்பர்களே நிச்சயமாய் நான் இடறி போயிருக்க வேண்டும். இல்லையென்றால் மறுநாளே அவளுக்காக வெடி காய்களை தேடி கொண்டு வந்திருக்க மாட்டேன். வெடி காய் என்பது கிராமத்து மாணவர்களிடம் வெகு இணக்கம். நெல் மணியை போலவே ஒரு மடங்கு பெரிதாக இருக்கும். அதை எச்சிலால் ஈரப்படுத்தி யாருடைய சட்டை காலர் இடைவெளியிலாவது தெரியாமல் வைத்து விட்டால் போதும். ஐந்து வினாடிகளுக்குள் அது பட் என்ற சிறு சத்தத்தோடு வெடிக்கும். அப்போது அவர்கள் என்ன நடந்தது என்று புரியாமல் பின்னாங்கால் கொண்டு கழுத்து சொரியும் மிருகம் போல கைகளால் கழுத்தை மாறி மாறி தட்டி கொண்டிருப்பது பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.

அய்! வெடி கா என்று சந்தோசத்துடன் வாங்கி கொண்டவள், அவள் பள்ளியில் நடந்த சில வெடி காய் நகைச்சுவை அனுபவங்களை வெகு சுவாரஸ்யமாய் சொல்லி அதற்க்கு அவளே சிரித்து கொண்டும் இருந்தாள். அப்போது ஏதோ ஒரு காகம் என் தலைக்கு மேல் அசிங்கம் செய்து விட்டது போல் “ச்சட்” என்று ஏதோ ஓன்று என் தலையில் விழுந்து தெரிக்கவும் நான் என்னையும் அறியாமல் பின்னங்கால் கொண்டு தலை சொரியும் மிருகமாகி போயிருந்தேன். நடந்தது என்னவென்று எனக்கு புரிந்த பொழுது வரம் கொடுத்த சிவன் தலையிலேயே வெடிகாய் வைத்த பெரிமிதத்தோடு தூரத்தில் இவள் நுரைக்க நுரைக்க சிரித்த படி ஓடிக் கொண்டிருந்தாள்.

வருடம்: 1993
இடம் : குரு டுடோரியல் சென்டர்,நன்னிலம்


அன்று ஆறாம் வகுப்புக்கு டியுசன் எடுக்கும் மிஸ் ஏனோ வராத காரணத்தினால் அருகில் இருந்த என் வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து அமருமாறு பணிக்கப் பட்டிருந்தனர். முதலில் ஓடி வந்த தேவிகா என் அருகில் தேடி வந்து அமர்ந்து கொண்டாள். பாடம் எடுக்கும் உத்தேசம் இல்லாத அருணா மிஸ் அரையாண்டு தேர்வு விடை தாளை கொடுக்க துவங்கிய கணம், கமலேஷ் எந்திரிச்சு இங்க வா என்றார். நான் அவர்கள் கையிலிருந்த பிரம்பின் பயத்தைவிட இவளுக்கு முன்பு அடி வாங்க வேண்டுமே என்ற வலி மேலோங்க எழுந்து சென்றேன். விடை தாளை என் கையில் கொடுத்தவர்... நீ எழுதி இருக்கிற கடுரையை எல்லோருக்கும் கேட்குற மாதிரி நல்ல சத்தமா படி என்றார். நான் படித்து முடித்த வேளை கட்டூரைன்னா இப்படிதான் உணர்ச்சி பூர்வமா எழுதணும். ஆறு தன் வரலாறு கூறுதல்னா ஆறே எழுந்திருச்சி வந்து இப்படிதான் பேசுற மாதிரி இருக்கணும். இவன் பேப்பர வாங்கி எல்லோரும் இன்னொரு தடவை படிச்சு பாருங்க என்று கூறிக் கொண்டே என் தோளில் கை வைத்தவர் முழு ஆண்டு பரீட்சைக்கு இந்த கட்டுரை மட்டும் வந்துச்சி இதை படிக்கிற வாத்தியார் இதுக்காகவே உன்னை பாஸ் போட்ருவாரு, போய் உட்காரு என்றார். பெருமை பிடி பட தேவி இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள். அன்றிலிருந்து அருணா மிஸ்சும், தமிழ் பாடமும் மிகவும் பிடித்துப் போய் இருந்தார்கள்....

வருடம் : 1997
இடம் : என் வீடு, நன்னிலம்


பத்தாம் வகுப்பு தேர்ச்சியுற்ற நான் தொழிற்கல்வி பயில சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். அந்த நெருக்கமான நகரத்தின் தார் சாலையில் என் களத்து மேடும், என் கிராமத்து சிநேகிதியும் தொலைந்து போய் இருந்தார்கள். கிட்ட தட்ட பத்து மாதங்கள் கழித்து நரகாசுரன் இறந்ததை கொண்டாட ஊருக்கு வந்திருந்தேன். என்னை பார்க்க வந்தவளிடம் ஏக போக வித்தியாசம். புதிதாக தாவணி அணிந்திருந்தாள்.கண்களில் வசீகரம் கூடி இருந்தது. அப்போது வந்த அப்பா, இந்த பத்து மாசத்துல நீ எப்ப வருவ எப்ப வருவன்னு இந்த புள்ள ஒரு நூறு தடவையாவது கேட்டிருக்கும்டா என்றார். ஓயாது சிறகடித்து கொண்டே இருக்கும் வண்ணத்து பூச்சி போல எதையாவது பேசிக்கொண்டே இருப்பவள் எதுவும் பேசாமல் மௌனமாகவே நின்று கொண்டு இருந்தாள். யாரும் இல்லாத நேரம் திடிரென ஒரு காகிதத்தை என் கையில் தினித்து விட்டு ஓடிப் போனாள். பிரித்தேன் . "மாலை பிடாரியம்மன் கோவிலுக்கு வரவும்". அந்த நாட்களுக்கு பிறகு என் ஹார்மோன்கள் என்னை முட்டாளாக்க துவங்கின. இல்லாத என் மீசையை சவரம் செய்ய துவங்கினேன். எப்படி திருப்பினாலும் என் திசைமானி அவளின் திசையையே காட்ட துவங்கியது.

வருடம் : 2002
இடம் : மயூரநாதர் ஆலயம், மயிலாடுதுறை.


மதிய நேரம் என்பதால் ஒரு கண்ணை இறுக்க மூடி கொண்டு ஒரு கண்ணால் மட்டும் வெளி உலகை பார்த்துக் கொண்டிருந்தது கோவில் வாசல். பிரகாரத்தில் அமர்ந்திருந்த நாங்கள் முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தோம். திருமணதிற்கு பிறகு பிறக்க போகும் முதல் பெண் குழந்தைக்கு என் விருப்படி பெயர், "ஜனனி". மகனுக்கு அவள் விருப்பப்படி இன்னும் தேடி கொண்டிருக்கிறாள். சட்டென ஏதோ ஞாபகம் வந்தவளாக என் சிறு வயது போட்டோவை எடுத்து என்னிடம் நீட்டியவள் இந்த போட்டோவுக்கு பின்னாடி கவிதை ஒன்னு எழுதிகொடுங்க என்றாள். எனக்கு அப்போது மிகவும் பிடித்து போயிருந்த...

அணு அணுவாய்
சாக முடிவெடுத்த பின்
காதல்
சரியான வழிதான் ....

என்னும் அறிவு மதியின் கவிதையை சொல்லி அதையே எழுதுவதாக சொன்னேன். வேண்டாம், வேண்டாம்.. உங்களோட கவிதையை.. உங்க கையாள.. எழுதுங்க. அழுத்தி,நிறுத்தி சொன்னாள். நான் சிரித்துக் கொண்டே நாளைக்கு வரும்போது வைரமுத்தோட "இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல" அப்படிங்கிற புத்தகம் கொண்டு வந்து தர்றேன். அதை முதல்ல நீ படி அப்புறமா என்னுடையதை கவிதையின்னே சொல்ல மாட்ட என்றேன். உங்களால இப்ப எழுத முடியுமா?. முடியாதா?...இப்போது அவளின் வரிகள் கொஞ்சம் சூடாக இருந்தது.இது எங்களுடைய எல்லா சந்திப்புகளிலும் நிகழும் ஒரு ஊடல்தான். இவள் குடும்ப மலரில் வரும் கவிதைகளை மட்டுமே படிக்கும் குடத்து தவளை என்பதால் என் கிறுக்கல்களை பிடித்து போய் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. என் கவிதைகளை இவள் ரசித்து பேசும் வேளைகளில் நான் என்னை சிறுமை படுத்தி கொள்வதில் ஒரு சந்தோசம் இருந்தது. நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுத குனிந்த வேலையில், கவிதைக்குள்ள நீங்களும் நானும் இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க என்றாள்.
சரி, அப்ப இன்னொரு நாள் யோசிச்சு எழுதுறேன்....இல்ல, இல்ல.. இப்ப.. இந்த நிமிசம் உங்க மனசுல என்ன தோணுதோ அதை எழுதுங்க. சில நாட்களாகவே மனதில் உருண்டு கொண்டிருந்த வரிகளை கண்களை மூடி ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டு எழுத துவங்கினேன்.

தேவதை உன்
விழிகளில் – என்
கானல் வரிகளும்
கவிதைகளாக
மலர்ந்து
லேசாக இங்கு
ஷ்சப்திகின்றன.


வாங்கி படித்தவளின் முகத்தில் பெரும் அதிருப்தி.நான் உங்களை என்ன எழுத சொன்னேன்.நீங்க என்ன எழுதி வட்சிருகீங்க உங்களையும் என்னையும் சேர்த்து எழுத சொன்னா... நீ என்ன சொன்னியோ அதைதான் எழுதி இருக்கேன் நல்லா படிச்சு பாரு.
என் மீது நிலைத்திருந்த அவளின் பார்வை ஒரு டால்ஃபின் போல எகிறி வரிகளுக்குள் குதித்து நீந்தியது. நிமிர்ந்தவள், இல்ல ஒன்னும், உங்களோடது கானல் வரி; நான் படிக்கும் போது கவிதையாகுதுன்னு எழுதி இருக்கீங்க என்று சிணுங்க துவங்கினாள். அவளின் கண்களையே சில நொடிகள் உற்று பார்த்து விட்டு பின்பு மெதுவாய் சொன்னேன்.கவிதையில உள்ள ஒவ்வொரு வரியிலையும் முதல் எழுத்தை மட்டும் மேலிருந்து கீழா படி. மீண்டும் டால்பின் குதித்தது.

தேவதை உன்
விழிகளில் – என்
கானல் வரிகளும்
விதைகளாக
லர்ந்து
லேசாக இங்கு
ஷ்சப்திகின்றன.


விளங்கி கொண்டவளின் உலகத்திற்கு அது போதுமானதாய் இருந்திருக்க வேண்டும்., விழிகள் முழுவதும் காதல் பொங்க வரிகளை அழுத்தி முத்தமிட்டாள். அவளின் உதடு பட்டு உயிர் கொண்ட எழுத்துக்கள் வண்ணத்து பூச்சியாகி பறந்தது.