Monday, May 3, 2010

இலந்தை பூக்கள்...

தோழி கயல் விழி சண்முகம் அவர்கள் "பதின் வயது நினைவுகள்" என்னும் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அடர்த்தியான வேலை பளு, அதன் தொடர்ச்சியாய் அடிவயிற்றில் நிகழ்ந்த ஒரு அறுவை சிகிச்சை. இப்பொழுதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறேன். ஆதலால் தாமதத்திற்கு தோழி மன்னிக்க...

பதின்ம வயது என்றதுமே எனக்குள் வந்து போவது....

- "நாண் அறுந்த ஒரு யாழ்" -

இப்பொழுதும் கூட அதனை இழுத்துக் கட்டி இசைக்கலாம்தான், என்றாலும் என்னிடத்தில் தற்போது விரல்கள் இல்லை. பெரும்பான்மையான கவிஞர்களின் பேனா மூடியை ஏதோ ஒரு தேவதைதான் திறந்து வைத்திருப்பாள். அப்படியே ஒருவள் என் ரோமின் தெருக்களிலும் பாடித் திரிந்தாள்.

இடம் : மாரகுடி வரப்பு
வருடம் : மங்கலாக இருக்கிறது...


நான் வேட்டைக்கு போன இலந்தை மரத்தின் அடியில் அந்த சிறுமி நின்று கொண்டிருந்தாள். வெகு திருத்தமான முகத்தில் நெடு நேர தேடலின் களைப்பும், எதுவும் கிடைக்காத வெறுமையும் பரவிக் கிடந்தது. நான் அவளை சற்று தள்ளியிருந்த மரத்தின் தணிந்த கிளைகளை லாவகமாய் பற்றி பலமாக உலுக்க துவங்கினேன். சட சடவென பழங்களும், காய்களுமாய் விழும் இசையை கேட்டு ஓடி வந்தவள் நான் முறைத்து பார்க்கவும் அப்படியே உறைந்து போய் நின்றாள். நான் மேலும் சில கிளைகளை உலுக்கி தயாராய் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையை கர்ப்பவதியாக்க துவங்கினேன். என் எதிரே வந்து நின்றவள் மெல்ல மெல்ல சொற்களை அவிழ்த்தாள். இதை ஸ்கூல்ல காசுக்கு விப்பீங்களா?.... குரலில் ஒரு மழலை இருந்தது. அவளின் கேள்விக்கு அர்த்தம் புரிந்தவனாக ஐந்தாறு பழங்களை அள்ளி அவள் கையில் கொடுத்த படி நீ எந்த ஸ்கூல் என்றேன். நீங்க படிக்கிற அதே ஸ்கூல்தான் என்று சொல்லவும் நான் ஆச்சர்யமாகி என்னை இதுக்கு முன்பே உனக்கு தெரியுமா என்றேன் . சட்டென உற்சாகமானவள், ம்...சாயங்காலம் பிரேயர்ல நீங்கதான டெய்லி குறள் படிப்பீங்க என்றாள். தான் அதே ஸ்கூலில் ஐந்தாவது படிப்பதாகவும் பெயர் தேவிகா என்றும் சொன்னவள் இரை தேட சென்ற பறவை போல மீண்டும் தன் கேள்விக்கே திரும்பினாள். நீங்க இதை ஸ்கூல்ல காசுக்கு விப்பீங்களா???? இல்ல, இதை என் தம்பி தங்கச்சிக்கு எடுத்திட்டு போறேன் என்றேன். மிகவும் தயக்கத்தோடு எனக்கும் இரண்டு தங்கச்சி இருக்கு, அதுங்களுக்கும் அஞ்சஞ்சி பலம் தருவீங்களா???? என்றாள். அவள் இழுவையில் இருந்த அந்த இசை குறிப்பு இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் சரி, வாங்கிக்க என்றதும் சட்டென நீலப் பாவாடையை பாத்திரமாக ஏந்தினாள். நான் பையில் இருந்த பழங்களில் கணிசமான ஒரு பகுதியை சரிக்க இதை சற்றும் எதிர் பாராதவள் விழிகள் விரிய நாளைக்கும் நீங்க இங்க வருவீங்களா என்றாள். நான் "ம்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிறகு தரித்த மான் குட்டியாக அவள் வீட்டை நோக்கி ஓடத் துவங்கி இருந்தாள். அதுவரை காய்களும், பழங்களும் மட்டுமே இருந்த இலந்தை மரத்தில் அன்றுதான் நண்பர்களே நான் பூக்களை கண்டேன்.

மறுநாள் அதற்கு பக்கத்திலிருந்த தூங்குமூஞ்சி மரத்தின் நிழலில் சனல் சாக்கை விரித்து, வைக்கல் பிரியை தலைக்கு கொடுத்தபடி பள்ளி கொண்ட ரெங்கநாதனாக ராணி காமிக்ஸ்குள் மூழ்கி போயிருந்தேன். சட்டென தலை பக்கமாய் மூச்சிரைக்க ஓடி வந்து அமர்ந்தவள் எனக்கெதிரே மூடிய கைகளை நீட்டி, பின்பு மெதுவாக விரித்தாள். "சில நெல்லி கனிகள்". இங்கு..இங்கு... இங்குதான்.... நண்பர்களே நிச்சயமாய் நான் இடறி போயிருக்க வேண்டும். இல்லையென்றால் மறுநாளே அவளுக்காக வெடி காய்களை தேடி கொண்டு வந்திருக்க மாட்டேன். வெடி காய் என்பது கிராமத்து மாணவர்களிடம் வெகு இணக்கம். நெல் மணியை போலவே ஒரு மடங்கு பெரிதாக இருக்கும். அதை எச்சிலால் ஈரப்படுத்தி யாருடைய சட்டை காலர் இடைவெளியிலாவது தெரியாமல் வைத்து விட்டால் போதும். ஐந்து வினாடிகளுக்குள் அது பட் என்ற சிறு சத்தத்தோடு வெடிக்கும். அப்போது அவர்கள் என்ன நடந்தது என்று புரியாமல் பின்னாங்கால் கொண்டு கழுத்து சொரியும் மிருகம் போல கைகளால் கழுத்தை மாறி மாறி தட்டி கொண்டிருப்பது பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.

அய்! வெடி கா என்று சந்தோசத்துடன் வாங்கி கொண்டவள், அவள் பள்ளியில் நடந்த சில வெடி காய் நகைச்சுவை அனுபவங்களை வெகு சுவாரஸ்யமாய் சொல்லி அதற்க்கு அவளே சிரித்து கொண்டும் இருந்தாள். அப்போது ஏதோ ஒரு காகம் என் தலைக்கு மேல் அசிங்கம் செய்து விட்டது போல் “ச்சட்” என்று ஏதோ ஓன்று என் தலையில் விழுந்து தெரிக்கவும் நான் என்னையும் அறியாமல் பின்னங்கால் கொண்டு தலை சொரியும் மிருகமாகி போயிருந்தேன். நடந்தது என்னவென்று எனக்கு புரிந்த பொழுது வரம் கொடுத்த சிவன் தலையிலேயே வெடிகாய் வைத்த பெரிமிதத்தோடு தூரத்தில் இவள் நுரைக்க நுரைக்க சிரித்த படி ஓடிக் கொண்டிருந்தாள்.

வருடம்: 1993
இடம் : குரு டுடோரியல் சென்டர்,நன்னிலம்


அன்று ஆறாம் வகுப்புக்கு டியுசன் எடுக்கும் மிஸ் ஏனோ வராத காரணத்தினால் அருகில் இருந்த என் வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து அமருமாறு பணிக்கப் பட்டிருந்தனர். முதலில் ஓடி வந்த தேவிகா என் அருகில் தேடி வந்து அமர்ந்து கொண்டாள். பாடம் எடுக்கும் உத்தேசம் இல்லாத அருணா மிஸ் அரையாண்டு தேர்வு விடை தாளை கொடுக்க துவங்கிய கணம், கமலேஷ் எந்திரிச்சு இங்க வா என்றார். நான் அவர்கள் கையிலிருந்த பிரம்பின் பயத்தைவிட இவளுக்கு முன்பு அடி வாங்க வேண்டுமே என்ற வலி மேலோங்க எழுந்து சென்றேன். விடை தாளை என் கையில் கொடுத்தவர்... நீ எழுதி இருக்கிற கடுரையை எல்லோருக்கும் கேட்குற மாதிரி நல்ல சத்தமா படி என்றார். நான் படித்து முடித்த வேளை கட்டூரைன்னா இப்படிதான் உணர்ச்சி பூர்வமா எழுதணும். ஆறு தன் வரலாறு கூறுதல்னா ஆறே எழுந்திருச்சி வந்து இப்படிதான் பேசுற மாதிரி இருக்கணும். இவன் பேப்பர வாங்கி எல்லோரும் இன்னொரு தடவை படிச்சு பாருங்க என்று கூறிக் கொண்டே என் தோளில் கை வைத்தவர் முழு ஆண்டு பரீட்சைக்கு இந்த கட்டுரை மட்டும் வந்துச்சி இதை படிக்கிற வாத்தியார் இதுக்காகவே உன்னை பாஸ் போட்ருவாரு, போய் உட்காரு என்றார். பெருமை பிடி பட தேவி இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள். அன்றிலிருந்து அருணா மிஸ்சும், தமிழ் பாடமும் மிகவும் பிடித்துப் போய் இருந்தார்கள்....

வருடம் : 1997
இடம் : என் வீடு, நன்னிலம்


பத்தாம் வகுப்பு தேர்ச்சியுற்ற நான் தொழிற்கல்வி பயில சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். அந்த நெருக்கமான நகரத்தின் தார் சாலையில் என் களத்து மேடும், என் கிராமத்து சிநேகிதியும் தொலைந்து போய் இருந்தார்கள். கிட்ட தட்ட பத்து மாதங்கள் கழித்து நரகாசுரன் இறந்ததை கொண்டாட ஊருக்கு வந்திருந்தேன். என்னை பார்க்க வந்தவளிடம் ஏக போக வித்தியாசம். புதிதாக தாவணி அணிந்திருந்தாள்.கண்களில் வசீகரம் கூடி இருந்தது. அப்போது வந்த அப்பா, இந்த பத்து மாசத்துல நீ எப்ப வருவ எப்ப வருவன்னு இந்த புள்ள ஒரு நூறு தடவையாவது கேட்டிருக்கும்டா என்றார். ஓயாது சிறகடித்து கொண்டே இருக்கும் வண்ணத்து பூச்சி போல எதையாவது பேசிக்கொண்டே இருப்பவள் எதுவும் பேசாமல் மௌனமாகவே நின்று கொண்டு இருந்தாள். யாரும் இல்லாத நேரம் திடிரென ஒரு காகிதத்தை என் கையில் தினித்து விட்டு ஓடிப் போனாள். பிரித்தேன் . "மாலை பிடாரியம்மன் கோவிலுக்கு வரவும்". அந்த நாட்களுக்கு பிறகு என் ஹார்மோன்கள் என்னை முட்டாளாக்க துவங்கின. இல்லாத என் மீசையை சவரம் செய்ய துவங்கினேன். எப்படி திருப்பினாலும் என் திசைமானி அவளின் திசையையே காட்ட துவங்கியது.

வருடம் : 2002
இடம் : மயூரநாதர் ஆலயம், மயிலாடுதுறை.


மதிய நேரம் என்பதால் ஒரு கண்ணை இறுக்க மூடி கொண்டு ஒரு கண்ணால் மட்டும் வெளி உலகை பார்த்துக் கொண்டிருந்தது கோவில் வாசல். பிரகாரத்தில் அமர்ந்திருந்த நாங்கள் முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தோம். திருமணதிற்கு பிறகு பிறக்க போகும் முதல் பெண் குழந்தைக்கு என் விருப்படி பெயர், "ஜனனி". மகனுக்கு அவள் விருப்பப்படி இன்னும் தேடி கொண்டிருக்கிறாள். சட்டென ஏதோ ஞாபகம் வந்தவளாக என் சிறு வயது போட்டோவை எடுத்து என்னிடம் நீட்டியவள் இந்த போட்டோவுக்கு பின்னாடி கவிதை ஒன்னு எழுதிகொடுங்க என்றாள். எனக்கு அப்போது மிகவும் பிடித்து போயிருந்த...

அணு அணுவாய்
சாக முடிவெடுத்த பின்
காதல்
சரியான வழிதான் ....

என்னும் அறிவு மதியின் கவிதையை சொல்லி அதையே எழுதுவதாக சொன்னேன். வேண்டாம், வேண்டாம்.. உங்களோட கவிதையை.. உங்க கையாள.. எழுதுங்க. அழுத்தி,நிறுத்தி சொன்னாள். நான் சிரித்துக் கொண்டே நாளைக்கு வரும்போது வைரமுத்தோட "இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல" அப்படிங்கிற புத்தகம் கொண்டு வந்து தர்றேன். அதை முதல்ல நீ படி அப்புறமா என்னுடையதை கவிதையின்னே சொல்ல மாட்ட என்றேன். உங்களால இப்ப எழுத முடியுமா?. முடியாதா?...இப்போது அவளின் வரிகள் கொஞ்சம் சூடாக இருந்தது.இது எங்களுடைய எல்லா சந்திப்புகளிலும் நிகழும் ஒரு ஊடல்தான். இவள் குடும்ப மலரில் வரும் கவிதைகளை மட்டுமே படிக்கும் குடத்து தவளை என்பதால் என் கிறுக்கல்களை பிடித்து போய் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. என் கவிதைகளை இவள் ரசித்து பேசும் வேளைகளில் நான் என்னை சிறுமை படுத்தி கொள்வதில் ஒரு சந்தோசம் இருந்தது. நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுத குனிந்த வேலையில், கவிதைக்குள்ள நீங்களும் நானும் இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க என்றாள்.
சரி, அப்ப இன்னொரு நாள் யோசிச்சு எழுதுறேன்....இல்ல, இல்ல.. இப்ப.. இந்த நிமிசம் உங்க மனசுல என்ன தோணுதோ அதை எழுதுங்க. சில நாட்களாகவே மனதில் உருண்டு கொண்டிருந்த வரிகளை கண்களை மூடி ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டு எழுத துவங்கினேன்.

தேவதை உன்
விழிகளில் – என்
கானல் வரிகளும்
கவிதைகளாக
மலர்ந்து
லேசாக இங்கு
ஷ்சப்திகின்றன.


வாங்கி படித்தவளின் முகத்தில் பெரும் அதிருப்தி.நான் உங்களை என்ன எழுத சொன்னேன்.நீங்க என்ன எழுதி வட்சிருகீங்க உங்களையும் என்னையும் சேர்த்து எழுத சொன்னா... நீ என்ன சொன்னியோ அதைதான் எழுதி இருக்கேன் நல்லா படிச்சு பாரு.
என் மீது நிலைத்திருந்த அவளின் பார்வை ஒரு டால்ஃபின் போல எகிறி வரிகளுக்குள் குதித்து நீந்தியது. நிமிர்ந்தவள், இல்ல ஒன்னும், உங்களோடது கானல் வரி; நான் படிக்கும் போது கவிதையாகுதுன்னு எழுதி இருக்கீங்க என்று சிணுங்க துவங்கினாள். அவளின் கண்களையே சில நொடிகள் உற்று பார்த்து விட்டு பின்பு மெதுவாய் சொன்னேன்.கவிதையில உள்ள ஒவ்வொரு வரியிலையும் முதல் எழுத்தை மட்டும் மேலிருந்து கீழா படி. மீண்டும் டால்பின் குதித்தது.

தேவதை உன்
விழிகளில் – என்
கானல் வரிகளும்
விதைகளாக
லர்ந்து
லேசாக இங்கு
ஷ்சப்திகின்றன.


விளங்கி கொண்டவளின் உலகத்திற்கு அது போதுமானதாய் இருந்திருக்க வேண்டும்., விழிகள் முழுவதும் காதல் பொங்க வரிகளை அழுத்தி முத்தமிட்டாள். அவளின் உதடு பட்டு உயிர் கொண்ட எழுத்துக்கள் வண்ணத்து பூச்சியாகி பறந்தது.


31 comments:

பத்மா said...

எத்தனை அழகாய் எழுதிருக்கீங்க கமலேஷ் ?
இதையெல்லாம் நினைத்தால் ஏதும் ஓடாதுதான்.
இப்போது உடல் நிலை நன்றாக உள்ளதா?
படிக்க இன்பமாய் இருந்தது

Chitra said...

சும்மா சொல்லக்கூடாது........ நல்லா ஒன்றி போய் எழுதி இருக்கீங்க. அருமையாக இருக்கிறது, :-)

'பரிவை' சே.குமார் said...

எத்தனை அழகாய் எழுதிருக்கீங்க கமலேஷ் !!!
இப்போது உடல் நிலை நன்றாக உள்ளதா?

அருமையாக இருக்கிறது

சீமான்கனி said...

இவளவு நாள் உங்கள் எழுத்துக்கு ஏங்கி கிடந்தவனுக்கு அமிர்தமாய் ஒரு பதிவு...காதல் வழிகிறது...நன்றி கமல் ஜி...உடல்நலம் பெற்று மீண்டும் பழயபடி எழுத இறைவனிடம் இறைஞ்சுகிறேன்...

நாடோடி said...

வார்த்தைக‌ளால் விளையாடி அருமையாய் எழுதியிருக்கீங்க‌.... ரெம்ப‌ ர‌சித்து ப‌டித்தேன்... உட‌ம்பை ந‌ன்றாக‌ பார்த்து கொள்ளுங்க‌ள்..

அகல்விளக்கு said...

படிக்கும்போதே நெஞ்சுக்கூட்டினுள் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்து விட்டன நண்பா...

பாராட்ட வார்த்தைகள் தேடிக் களைத்துப்போய் விட்டேன்...

:-)

ஹேமா said...

கமலேஸ் சுகம்தானே.உங்களைத் தேடியிருக்கிறேன் நான்.இப்போ இத்தனை நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறதில மிக்க மிக்க மகிழ்ச்சி சகோதரா.சத்திர சிகிச்சை என்று சொல்லியிருக்கிறீங்க.இப்போ எப்பிடி சுகம்தானே.கவனித்துக்கொள்ளுங்கள் கவனமாக உங்களை.

பதின்மத்தை இலந்தைப் பூக்களின் நினைவோடு அழகாய் காதல் நினைவுகளாய்க் கோர்த்துவிட்டிருக்கிறீர்கள்.இன்னும் வேறு விஷயங்களும் சொல்லியிருக்கலாமோ !

இனி உங்கள் பதிவுகள் தொடரும் என்று நினைக்கிறேன்.வாழ்த்துகள்.

Anonymous said...

"நாண் அறுந்த ஒரு யாழ்". இப்பொழுதும் கூட அதனை இழுத்துக் கட்டி இசைக்கலாம்தான், என்றாலும் என்னிடத்தில் தற்போது விரல்கள் இல்லை. பெரும்பான்மையான கவிஞர்களின் பேனா மூடியை ஏதோ ஒரு தேவதைதான் திறந்து வைத்திருப்பாள். அப்படியே ஒருவள் என் ரோமின் தெருக்களிலும் பாடித் திரிந்தாள்.


முதல் பத்தியே கட்டிப்போட்டு விட்டது அழகாய் தொடுத்து இருக்கீங்க இந்த கட்டுரை மலரை என் தோழி கயலுக்கு நன்றி சொல்லிக்கனும் நான் இதற்காக....

Henry J said...

very nice..........


Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips

கமலேஷ் said...

@பத்மா : உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி பத்மா, உடல் நிலை இப்போது சரியாகி விட்டது.

@சித்ரா : உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சித்ராக்கா.

@சே.குமார் : உடல் நிலை தற்போது சரியாகி விட்டது. உங்களின் கனிவான விசாரிப்புக்கு மிக்க நன்றி நண்பரே..

@ சீமாங்கனி : மிக்க நன்றி ஜி, வேலையெல்லாம் எப்படி போகிறது, எப்ப vaccation ..

@ நாடோடி : உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே,

@ அகல்விளக்கு: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி, தோழரே...

@ ஹேமா: உண்மைதான் சகோதரி,பால்ய நினைவுகள் என்பது ஒரு பெரு மழை, கொட்டாங்கட்சி போன்ற இந்த சிறிய பதிவிற்குள் அத்தனையும் சேகரிக்க முடியவில்லை. உடல் நிலை இப்போது மிக்க சுகம்.மிக்க நன்றி சகோதரி...இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..

@ தமிழரசி: மிக்க நன்றி தோழி, உங்களின் பருவ காலங்களின் பார்வைக்கு...பதிவு மிகவும் அருமையாக ரசிக்கும் படி இருந்தது...வாழ்த்துக்கள்,

@ஹென்றி : மிக்க நன்றி தோழரே..

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html

விஜய் said...

கமலேஷ் உடல் நலமா ?

நீண்ட நாட்களாகி விட்டது

படிக்கும் அனைவருக்கும் நோஸ்டால்ஜிக் நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டீர்கள்.

அருமையான நடை

வாழ்த்துக்கள்

விஜய்

ஜெனோவா said...

நண்பா,நலம் தானே ! நலமே கிடைக்க பிராத்தனைகள்...

மிக யதார்த்தமான எழுத்து நடை.. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்தான்.. இருந்தாலும் இதுவும் அருமைதான்..

வாழ்த்துகள்

Thenammai Lakshmanan said...

முதல் கேள்வி கமலேஷ் .. தற்போது நலமுடன் இருகிறீர்களா.. ரொம்ப ஸ்ட்ரெயின் செய்ய வேண்டாம்..

அடுத்து //அன்றுதான் நண்பர்களே நான் பூக்களை கண்டேன். /// எங்களையும் இந்த வரிகளில் பூக்க வைத்து விட்டீர்கள் கமலேஷ்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையாக இருக்கிறது, :-)
அழகாய் எழுதிருக்கீங்க கமலேஷ்

Priya said...

ர‌சித்து ப‌டித்தேன்!

Take care!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. உங்க மலரும் நினைவுகள்.. அருமையோ அருமை..
இலந்தை பழத்துல ஆரம்பிச்சு.. தேவிகாகமலேஷ் வர பின்னிட்டீங்க.. போங்க..

உங்க எழுத்து நடையும் சூப்பர்.. வாழ்த்துக்கள்.. :)

(பி. கு: உடம்பு பரவாயில்லையா?? அப்புறம், உங்க முதல் முயற்சின்னே சொல்ல முடியல.. அவளோ நல்லா இருக்கு)

அவனி அரவிந்தன் said...

பசுமையான கொடியைப் போல படரும் கதையில் இளஞ்சிவப்புப் பூக்களாய் சில கவிதைகள். ரொம்ப நல்லாயிருக்கு கமலேஷ் !

மார்கண்டேயன் said...

கமலேஷ் !, கண் பார்வையால் கண்டாலும் காணமுடியா உணர்வுகளை கண்ணால் காணவைத்திருக்கிறீர்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

சுமார் இரண்டு மாத கால கட்டத்திற்கு பிறகு உங்களுடைய வரிகளை காண்பதில் மகிழ்ச்சி என்றாலும்...

உங்களின் உடல்நலம் குன்றி குணமாகி கொண்டிருப்பதை படித்த சமயம் மனதில் தோன்றிய இனம்புரியாத ஒரு வருடலும்...

விரைவில் பூரண குணமடைய இறைவனிடம் என் வேண்டுதலையும் கோரிக்கையாய் வைக்கின்றேன்...

இந்த தருணத்தில் உங்களின் வரி(லி)களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு என்னின் மனமார்ந்த நன்றியையும் தெரிவிக்கின்றேன்...

கயல் said...

இத்தனை அழகான பதின்ம நினைவுகள். என் வேண்டுகோளுகு அழகான அற்புதமான படைப்பு. நன்றி நண்பரே! வாழ்த்துக்கள் தொடருங்கள்/

அன்புடன் மலிக்கா said...

கமலேஷ் கலக்கிட்டீங்க மிக அற்புதமாக எழுதியிருக்கீங்க அதிலும் இருவர் பேரைஇணைத்து ஒரு கவி சூப்பர்..

நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/2010/05/10.html

கா.பழனியப்பன் said...

உங்க‌ க‌ட்டுரை கூட‌ நீட்டி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌விதையாக‌வே என்க்குப்ப‌டுகிறது.எல்லா வ‌ரிக‌ளிலும்
க‌விதை ஊற்று சுறக்க‌க் க‌ண்டேன்.வாழ்த்துக்க‌ள்.

Jerry Eshananda said...

ஷ்.ஷ்..கமலேஷ்.பின்னிட்டீங்க.

anujanya said...

ஹ்ம்ம், நடக்கட்டும். நல்லா இருக்கு. உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

அனுஜன்யா

கா.பழனியப்பன் said...

கமலேஷ் உங்களின் அழைப்பை ஏற்று பதிவு எழுதியிருக்கிறேன்.
படிச்சிங்கலா இல்லையா ?

பா.ராஜாராம் said...

தேர்ந்த கதை சொல்லிக்கான நடை.

மிக அருமையாய் வந்திருக்கு கமலேஷ். hats off!

மார்கண்டேயன் said...

என்னவோ தெரியவில்லை இலந்தைப்பூக்களின் வாசம் பலமுறை உங்கள் வலைப்பக்கத்திற்கு வரவைக்கிறது, வளமான வார்த்தைகளால் வசப்படுத்திய கமலேஷுக்கு கனிவான நன்றி, விரைவில் வாருங்கள் வலையுலகிற்கு

Sugirtha said...

இத்தனை நாள் எப்படி உங்க பதிவுகளை பார்க்காமல் இருந்தேன். அருமையா இருக்குங்க.

Saravana kumar said...

படிக்கப் படிக்க இனிக்கிறது... சிலநேரம் வலிக்கிறது...

தேவிகாவை பத்திரமா பாத்துகோங்க..!

கவிநா... said...

ஆஹா... சுவாரஸ்யமான எழுத்து நடை... எளிதாகக் காட்சிப்படுத்தி கட்டிப்போடும் அழகு...
பதின்ம வயது வாழ்க்கை இலந்தைப் பழம் போலவே இனித்தது. அருமையான அனுபவப்பதிவு.

குறிப்பாக -
"தேவதை உன்
விழிகளில் – என்
கானல் வரிகளும்
கவிதைகளாக
மலர்ந்து
லேசாக இங்கு
ஷ்சப்திகின்றன." - இக்கவிதை வரிகள் உண்மையாகவே ஷ்சப்திக்கின்றன....

வாழ்த்துக்கள் சகோ..


--
அன்புடன்
கவிநா...