Wednesday, June 23, 2010

மஞ்சள் தடவிய மரணப் பத்திரிக்கை.

உன் மௌனம் பாய்ந்து
சிதைந்து போன
என் இதயத்தின் துணுக்குகளை
சேகரித்துக் கொண்டே கேட்கிறேன்.

அதற்க்கு முன்
உன் நாசியினில் ஓர்
கைக்குட்டையை கட்டிக் கொள்.

ஏனெனில்
உன்னால் காயம் பட்ட
என் சுவாசப் பைகளிலிருந்து
இரத்தத்தின் வாடை வீசக் கூடும்.

*
நரமாமிசம் தின்னும்
இந்த செவிட்டு உலகின் பிடியிலிருந்து
என்னை ரட்சிக்கும் பொருட்டு
நம் நிறை மாத சிசுவை
இரையிடுகிறேன் என்கிறாய்.

நீரிலிருந்து ஈரம் கழித்த பின்
பாவி ! மிச்சமென்னடி
இன்னும் மிச்சம்.

ஒற்றை சிறகை இழந்த பறவை
முறிந்த கிளையில் அமர்ந்து
உறைந்த முகாரியை
எத்தனை காலம் இசைக்குமென
எண்ணித் துணிந்தாயா இக் கர்மம்.

இதோ -
துடிக்க துடிக்க
என் காதலை புசிக்கிறது பார்
உன் பெரு மௌனம்.

*
சலனமற்று நீ நீட்டும்
இந்த உன் மண ஓலை
உறையிடப்பட்ட எனது கல்லறை

நடுங்கும் விரலோடு
மெல்ல மயானத்தின்
கதவுகள் திறக்கிறேன்.

அங்கே அச்சிடப்பட்டிருக்கிறது
என் மரணத்தின் தேதி.

*
இக் கவிதையின்
இறுதி ஊர்வலத்தில்
எதிரொலிக்கும் பறையோசையில்
உனக்காக நான் விட்டு போவது
ஒற்றை குறிப்பை மட்டும்தான் தோழி.

என் தீர்ப்பின் முற்றுப் புள்ளியில்
நீ ஒடித்த பேனா முனையென
உன் இமையிலிருந்து
ஒரு சொட்டுக் கண்ணீர்
எனக்காக முறியுமெனில்
உன்னை மன்னித்ததின் அடையாளமாய்
எரியும் என் சிதையிலிருந்து
பிறண்டு விழும் ஓர் விறகு.

.

Saturday, June 19, 2010

நீ தந்தவை...



உன் சிவந்த உதடு பிரித்து
நாவை வெளியில் நீட்டி
சுழற்றுகிறாய்.
பொறி தட்டிய பிரம்மன்
மையத்திலாடும் மகரந்தத்தோடு
செய்ய துவங்குகிறான்
ஒரு செம்பருத்தியை.

*
குளித்தது போதுமென்று
நீ கரையேறி விட்டாய்.
திரும்பி பார்.
உன்னை பிரிய முடியாமல்
பின்னால் ஓடி வருகிறது
நதி.

**
சுழித்துக்கொண்டோடும்
இந்த வரிகளும்,
இந்த வரிகளின் படுகையில்
படிந்து கிடக்கும் வலிகளும்,
உனக்கு சொந்தமானவை.
ஏனென்றால்
இவை
நீ தந்தவை.

.

Monday, June 14, 2010

சொல்லத் தெரியாதவை...


1 .
நல்லது.
ஒரே முயற்சியில்
சுடரை
மிகச் சரியாக
ஊதியனைத்து விட்டீர்கள்.
ஆனால்
கருகிய திரியின் முனையிலிருந்து
வலியோடு மேலெழும்பும் புகையின்
ஏன் ? என்ற கேள்வியை
என்ன செய்ய போகிறீர்கள்.

சூரியன் வந்த பிறகு
இச் சிறு சுடரின் தயவெதற்கென
ஒற்றை வரியில் கடந்து விடலாம்தான்

என்றாலும்,
அவ்வரிகளை கொஞ்சம்
அழுந்தச் சொல்லுகையில்
உங்கள் இரவுகளெங்கிலும்
மெல்லிய துரோகம் கசிகிறது.

2 .
கூட்டினில் பசியோடிருக்கும்
குஞ்சுகளுக்காக
இரை தேடும் இப் பறவையின்
கால்களில் இருக்கும் நடுக்கத்தையோ,
கண்களில் தெரியும் தவிப்பையோ
எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
ஆனால்
அதன் தேடல் மட்டும்
நலிந்த தகப்பனொருவனின்
வாழ்க்கையை ஒத்திருந்தது

3 .
எனக்கு சொந்தமான
வாழ்க்கையின் பெரும் பகுதியை
தின்று விடுகிறது -
என் வயிறு

.