Wednesday, January 20, 2010

விழுந்தவனுக்கு ஒரு கடிதம்...

எழுந்திரு தோழா,
தோல்வியொன்றும் சமுத்திரமன்று
துவண்டு போக,
நீ எழுந்து நின்றால்
அது சிறிய சாலவம்

கரங்களில் அள்ளிய வாழ்க்கை
விரல்களின் இடுக்கு வழி
ஒழுகியதென்றா கவலையுற்றாய்

நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப்பா
எழுந்திரு...

மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக்கொணர்ந்தது
நீ உன்னை உரித்து
என்னவென்று உணரலாம்
எழுந்திரு

நான்
இமயமாய் உயர வேண்டுமென
இறைவனிடம்
வரம் கேட்கிறாய்,

புத்தியை பூட்டி
சாவியை தொலைத்தவனே !!

இறைவன் வீணைதான் தருவான்
இசையை நீதான் மீட்டிக்கொள்ள வேண்டும்

நடக்கும் வரைதான் நதி
தன் நடையை நிறுத்திக்கொண்டால்
அது குட்டை

இங்கு விழுவதல்ல அவமானம்
விழுந்தவன் அசைவற்று போனால்
அதுதான் அவமானம்
விழுந்த உன் விரல் அசைந்தாலும் போதும்
நீ புதிதாய் பிறந்து விடுகிறாய்
எழுந்திரு

வாழ்கையை வென்றவனெல்லாம்
அதிகாலை எழுந்தவனாம்
குறித்துக் கொள் உன் படுக்கையில்

கனவுகளோடு கண்களை மூடு
குறிக்கோளோடு கண்களை திற

உன் முன் இருப்பது விளக்கா
நீ தீபம் !
முட்களின் புதரா ?
நீ தீ !!

தாகமாய் இருந்த முயற்சிகளை
சுவாசமாய் மாற்று

இதுவரை நீ கடந்து வந்தது
கள்ளிக்காடு
இனி தாண்டப் போவதோ
நெருப்பு பள்ளங்கள்

ஆனால்
சினங்கள் களைந்து
புன்னகை எனும்
சிறகுகள் தரித்துக் கொள்

தோல்விகள் உன்னை சூழ்வினும்
காற்றில் கரையும் கற்பூரம் போல
திரவமின்றி வாயுவாக
பதங்கமாகிப் பழகு

இன்று உன்னில் விழுந்த தோல்விகள்
மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,
காலங்களின் வயது நரைக்கும் போது
அது வைரமாகிப் போகும்.

- ( ஒரு தோல்வியின் அடிவாரத்தில் அமர்ந்து
எனக்கு நானே எழுதிக்கொண்டு
எழுந்து வந்த வரிகள் இது.
2004 பழைய டைரி குறிப்பிலிருந்து ) -


Thursday, January 14, 2010

முதிர் கன்னியின் பிறழும் இரவு...

என்னுடைய எல்லா இரவுகளிலும்
வந்து அமர்ந்து கொள்கிறது
உருவமில்லா ஒரு யாளி

அதன் பசிக்கு
என் உறக்கம் தின்று
தாகத்திற்கு
என் கண்ணீர் குடிக்கிறது

ஒற்றையில் எறியும்
இந்த மெழுகுவர்த்தி
செல்வியாக புலரும்
என் இரவுகள் குறித்து
அழுது தீர்க்கிறது

முயங்கி கிடக்கும்
இரு சுவர்கோழி கண்டு
துளிர்க்கும் ஹார்மோனில்
தேனீக்களின் கொடுக்குகள்

கர்ப்பம் திணிக்கப்பட்ட வயிறு
என் தலையணைக்கு மட்டும்தான்
வாய்க்கும் போல

பழுப்பேறிய
என் வயதின் வலியில் பூத்த நெருப்பில்
கருகும் கண்ணகியின் கால்சிலம்பு
மாதவியின் குங்குமத்தின் மீது படிகிறது

புழக்கமற்று கிடக்கும் ஒரு
புல்லாங்குழலின் வலியை
விலை பேசும் நீங்கள் அறிய
வாய்ப்பில்லை

நேற்று
சாமத்தில் குறி சொன்ன கோடாங்கிக்கு
காலையில் நான் கொடுத்த
முளை கட்டிய பயிறு
ஏதேனும் குறிப்பை
உணர்த்தியிருக்க கூடும்

இன்றிரவு
நான் கதவை.
தாழிடப் போவதில்லை.

.

Monday, January 4, 2010

நீரியல் சுழற்சி...


தேங்கி கிடக்கும்
நீர் நிலை நான்
என்மீது கவிழ்ந்து படுக்கும்
சூரியனின் கதிர்வீச்சு நீ -
தொடங்கியது ஆவியாதல்.

என் இதழோடு இதழ் கவ்வி
நீ உறுஞ்சிய தேவகனத்தில்
தன்னிலை மறந்த நான்
தொலைந்து போகிறேன்
காற்றின் பெருவெளியில்.

உன் முத்தத்தில் முக்தி பெற்று
வெட்கத்தில் விலகி ஓடி நிற்கிறேன்
தூர வானத்து கார்முகிலாய்.

உன் சிதோஷன சிறு விரல்கள்
செல்லமாய் தலை வருட
தடுமாறிய என் உயிரின் பிடியிலிருந்து
நழுவி விழுகிறது மழை துளி.

நீ பிரிந்து போகும் இரவுகளை
நினைத்துக் கொண்டவள்
உன் மார்பில் முகம் புதைத்து
ஒரு பெருமழையென
குலுங்கி அழுகிறேன்.

உடைந்து சிதறும்
என் கண்ணீரின்
ஈரம் துடைக்க
ஓடி வருகிறது
உன் வெயிலின் விரல்கள் .

.