Friday, March 25, 2011

சித்தார்த்தன் கனவு.

இந்த கவிதை
நடனமாடியபடி நகர்ந்து செல்லும்
சொற்களின் ஊர்வலமல்ல,
ஒவ்வொரு சுள்ளியாய்
கொண்டு வந்து கட்டிய
பறவையின் கூடும் அல்ல.

இந்த கவிதை
மொக்கவிழ்ந்த இந்நொடிகளின்
வாசனையல்ல,
கிழித்த நாட்காட்டியிலிருந்து வழியும்
இரத்தமும் அல்ல

இந்த கவிதை
கவிஞனொருவன் தன் இருப்பை வெளிப்படுத்த
சொற்களில் பீய்ச்சும் வெளிச்சம் அல்ல,
மேடை நடிகனொருவன்
ஒப்பனை கலையும்
அந்தரங்க அறையும் அல்ல.

இந்த கவிதை
இரு ஜோடி உதடுகளின் இடைவெளியில்
ஊறிக்கொண்டிருக்கும்
ஒரு முத்தத்தின் சுடரல்ல,
இன்னும் வெம்மையடங்காத
தகப்பனின் எரிந்த சிதையிலிருந்து
அஸ்தி சேகரிக்கும் ஒரு சிறுவனின்
நடுங்கும் மௌனமும் அல்ல.

விடிந்த பின்னரும் எரிந்தபடியிருக்கும்
அணைக்க மறந்த தெருவிளக்கின்
இரவை புணர்ந்த நினைவல்ல,
உச்சத்தில் முறியும் உடலல்ல,
காலமல்ல,..
கருணையல்ல...

இந்த கவிதை -

காற்றில்
சிறகு பதியாமல்
கடந்து போகும்
ஒரு பறவையின் சுவடுகள் ,

வேண்டுதல் எதுவுமற்ற
ஓர் பிரார்த்தனை,

உறங்கும் குழந்தையின்
சிரிக்கும் உதடுகள்.


அல்லது
எதிர்வரும் பாதசாரி
எதிர்பார்ப்பில்லாமல் வீசிப்போகும்
ஓர் மாசற்ற புன்னகை,