Wednesday, May 19, 2010

தடாக குறிப்புகள்...

குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து
பூத்திருக்கிறது தாமரை.

இன்னும் மலராத மொட்டுக்கள் சில
ஆடிக்கொண்டிருக்கின்றன,
கட்டிலில் குலுங்கும்
பெண்ணின் தனங்களையொத்து.

தன் மேல் கிடக்கும் துளிகளை
நட்சத்திரங்களாக்கி உருட்டி விளையாடுகின்றன,
தடாக புரசை இலைகள்.

குளத்தில் கிடக்கும் சூரியனை
அலகில் கொத்தி கொண்டு பறக்கிறது,
பெரும் பசி கொண்டதொரு
மீன்கொத்தி.

நீரில் நகரும் மேகத்தின் இடுக்குகளில்
ஓயாது சலம்பிக் கொண்டேயிருக்கிறது,
மின்னலை பூசிக்கொண்ட
மதம் பிடித்த மீன் ஓன்று.

அட்டை இல்லா புத்தகமென
திறந்து கிடக்கும் இக் குளக்கரையில்
புல்லாங்குழலேன இசைக்க துவங்குகிறேன்
ஒரு சிகரெட்டை.

சட்டென நீரிலிருந்து
யாழதிர படி ஏறிப்போகும் கவிதையொன்றின்
செழிப்பான தேகத்திலிருந்து
சொட்டிக் கொண்டே இருக்கின்றன
இச் சொற்கள் யாவும்.

.

39 comments:

விஜய் said...

அற்புதம் , அழகு

வாழ்த்துக்கள்

விஜய்

நாடோடி said...

//அட்டை இல்லா புத்தகமென
திறந்து கிடக்கும் இந்த குளக்கரையில்
புல்லாங்குழலேன இசைக்க துவங்குகிறேன்
ஒரு சிகரெட்டை. ///

வ‌ரிக‌ளில் க‌ற்ப‌னை விரிகிற‌து..

அகல்விளக்கு said...

அற்புதமான வடிப்பும், வர்ணணையும்...

மனதைத் தழுவுகிறது கவிதை...

கயல் said...

நிறுத்தி நிதானித்து மிகவும் நேர்த்தியாக உள்ளது கவிதை.

//
மேகத்தின் இடுக்குகளில்
ஓயாது சலம்பிக் கொண்டேயிருக்கிறது,
மின்னலை பூசிக்கொண்ட
மதம் பிடித்த மீன் ஓன்று.
//
மதம் பிடித்த மீன்? ஹா ஹா!அருமை.

padma said...

கயல் கூறியது போல முதலில் என்னைக் கவர்ந்தது அந்த மத மீன் ....அருமை

முதல் வரியே கொள்ளை அழகு ..அதனை மனதிலேயே உருவகித்து மயக்கம் போகாமல் திளைக்கிறேன் கமலேஷ் ...

கவிதையை கண்ணுற்ற நீங்கள் அதிர்ஷ்ட சாலி தான் ...

அழகிய படமென விரிகிறது கவிதை .
வாழ்த்துக்கள்

D.R.Ashok said...

ஆரம்ப வரி அசத்தல் :)

Chitra said...

அந்த அழகு காட்சியை, எங்கள் கண் முன்னும் கொண்டு வந்த கவிதைக்காக, உங்களுக்கு பாராட்டுக்கள்!

ராதை said...

குளக்கரையை விட்டு எழுந்து வர மனதே வரவில்லை.. அற்புதம் :)

அன்புடன் அருணா said...

ரொம்பவும் அழகான கவிதை!பூங்கொத்து!

goma said...

மதம் பிடித்த மீன் ஓன்று.

மீன் பாகனைக் கூப்பிடுங்கள்..அங்குசம் வைத்து அடக்கிவிடுவான்

Madumitha said...

//யாழதிர படிஏறிப்போகும் கவிதை//

வசீகரத்தின் உச்சம்.

seemangani said...

//பெரும் பசி கொண்ட
மீன்கொத்தி//

//குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்த தாமரை//

//மதம் பிடித்த மீன்//

தடாகத்தின் பழைய தடயங்களை எல்லாம் தகர்த்து விட்டது உங்கள் கவிதை...அற்புதம் , அழகு வேறு வார்த்தைகள் இல்லாததால் வாழ்த்துகளை விட்டுச் செல்கிறேன்...
வாழ்த்துக்கள்...

ஹேமா said...

கற்பனை...கற்பனை.இன்னொரு உலகம்.ஆனால் அங்கும் சிகரெட் !

hemikrish said...

மிக அழகான வர்ணனை....எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..வாழ்த்துக்கள்!!

உயிரோடை said...

அழ‌கிய‌ல்

//யாழதிர படி ஏறிப்போகும் கவிதையொன்றின்
செழிப்பான தேகத்திலிருந்து
சொட்டிக் கொண்டே இருக்கிறது
இச் சொற்கள் யாவும்.//

மிக‌ப் பிடித்த‌து

Ananthi said...

//குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து
பூத்திருக்கிறது தாமரை.//

ஆரம்பமே அசத்தல் போங்க.. ரொம்ப அழகா இருக்கு :)

அனுஜன்யா said...

ரொம்ப அழகாக வந்திருக்கு. கல்யாண்ஜியின் ஒரு கவிதையும் ஞாபகத்திற்கு வந்தது.

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்குபோல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்
தலைகீழாய் வரைந்துகொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது கண்ணாடிக்குளம்
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது

அனுஜன்யா

ஜெனோவா said...

நண்பா , அற்புதமான கவிதை , நேற்றே படித்தேன் .
வாழ்த்துக்கள்

அண்ணாமலை..!! said...

உக்காந்து யோசிப்பாங்களோ??
அருமையான வர்ணனைகளும், விவரிப்புகளும்!!!

Priya said...

வாவ்.. ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கிங்க.. நைஸ்!

Matangi Mawley said...

azhagu!

குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து
பூத்திருக்கிறது தாமரை.


azhaku! azhaku!

சத்ரியன் said...

கமலேஷ்,

நெடு நாளைக்குப் பிறகு, சுவையுடன் ஒரு கவிதையை ரசிக்கும் பாக்கியத்தை அளித்திருக்கிறாய். நன்றியும் வாழ்த்துகளும்..!

உன் பெயரிலிருந்தே (கமல்=தாமரை) துவங்குகிறது கவிதை. அதை கவனித்தாயா?

கா.பழனியப்பன் said...

உங்க கவிதை இந்த வெக்கை காலத்திலும் மாலை நேர
மொட்டை மாடி வேப்ப மரத்து காத்து வாங்குற சுகம் தருதுங்க‌.
உங்க கற்ப்பனை உழகம் மிகவும் வசிகரமானது.அந்த வசிகரம் என்னை மீண்டும் மீண்டும் உங்களிடம் அழைத்து வருகிறது.

என்னுடைய மின் அஞ்சல் :
palaniyappan.ora@gmail.com

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

அழகான படிமம் அழகான மொழி பிரயோகம். நல்ல அனுபத்தை தருகிறது கவிதை. வாழ்த்துக்கள் கமலேஷ்.

D.R.Ashok said...

கல்யாண்ஜியின் கவிதையை ரசிக்க கொடுத்தற்கு அனுஜன்யா யூத்துக்கு நன்றி :)

கமலேஷ் said...

கருத்துரை இட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி..
கல்யான்ஜியின் கவிதையை வாசிக்க கொடுத்த அனுஜன்யா அவர்களுக்கு மிக மிக நன்றி...

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு.

சொல்லப் போனா பொறாமையாய் இருக்கு, காமேஷ்!

really! :-)

பா.ராஜாராம் said...

sorry,பெயரை தவறாக தட்டச்சு செய்துவிட்டேன்.

சவுதியில்தான் இருக்கிறீர்களா கமலேஷ்? தொடர்பு கொள்ள இயலுமா?

rajaram.b.krishnan@gmail.com

சுந்தர்ஜி said...

ஒரு ஓவியம் போலவும் சிற்பம் போலவும் காட்சி ரூபம் காட்டும் இக்கவிதை,மயக்கும் மொழியும் வியக்கவைக்கும் உவமைகளாலும் ஒரு கவிதையாகவும் மிதக்கிறது மனதில்.அற்புதம் கமலேஷ்.

பிரியமுடன் பிரபு said...

மிக அருமை

தஞ்சை.வாசன் said...

கற்பனையின் வடிவம் கவிதை என்றாலும்...
எண்ணங்களை வண்ணங்களாக இங்கே அழகிய வரிகளுடன் எங்கள் மனதை கொள்ளைக்கொண்டு...

மிகவும் அருமை...

என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா...

சி. கருணாகரசு said...

கவிதை... மிக மிக அழுத்தமான அழகாய் இருக்குங்க.... பாராட்டுக்கள்.

சி. கருணாகரசு said...

புல்லாங்குழலேன இசைக்க துவங்குகிறேன்
ஒரு சிகரெட்டை. ///

இதில் சிகரட்டிற்கு பதி வேறு ஏதாவது கொண்டுவரலாமே.....

கவிதையின் அழுகிற்கு கரும் புள்ளி எத்ற்கு?

மாறாக கரையேறும் கவிதை ... இதையே காரணம் காட்டி உங்கள ஒதுக்கவும் வாய்ப்பிருக்குங்க.

தியாவின் பேனா said...

சூப்பர்.வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

அருமையாக இருக்கு கமலேஷ்.
வாழ்த்துக்கள்..

நியோ said...

சொட்டிக் கொண்டே இருக்கும்
உங்கள் சொற்களிலிருந்து
வீசிக் கொண்டிருக்கிறது தாழம்பூ மணம் ...
வியக்கிறேன் ...
இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா வென ...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

கவிதை ஒரு ஃபோட்டா போல் இருக்கிறது, மனதுக்கு மிக்க நிறைவாய்!

அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

மார்கண்டேயன் said...

நண்பரே, வரிகளை வார்த்து வடிக்கிறீர்கள், சொற்களை செதுக்குகிறீர்கள், இருப்பினும் 'சிகரெட்டை' போன்ற ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாமே . . . .

இரா.அன்புராஜா said...

eppadi solla?
eththanai murai ikkavithiakalai padiththiruppen...
innum michchamai irukkinrathu aachchiriyangkal!