Wednesday, September 29, 2010

கதவாயுதம்

பறந்தபடி கிளை மீது வந்தமரும்
ஒரு பறவையின் மடங்கும் சிறகைப் போல
அத்தனை இயல்பாய் இருப்பதில்லை
நிராகரிப்பின் போது அடைக்கப்படும் கதவுகள்

அறைந்து சாத்தப்படும்
ஒரு கதவின் முன்னால் நிற்க வாய்த்தவன்
தன் வாழ்நாளெல்லாம் ஒரு சிலுவை போல்
அக் கதவை சுமந்து திரிகிறான்.

கர்த்தரின் நடுநெஞ்சில் இறங்கும்
கடைசி ஆணியென ஒலிக்கிறது
ஒரு நிராகரிப்பின் போது
மூடிய கதவினில் நகரும் தாழ்.


சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.

ஒரு புத்தகத்தின்
பக்கங்களை புரட்டும் சுவாதீனத்துடன்
மூடப் பெறும் கதவுகளையும்,
மயானத்தில் எரியூட்ட போகும்
ஒரு சிதையின் முகத்தை மறைக்கும்
கடைசி வரட்டியையும்,
ஒரே நேர் கோட்டில் கண்டு
திடுக்கிட்ட பறவைகள்
தத்தம் வாழ்நாளில்
கதவுகளை தட்டுவதுமில்லை,
வைத்துக் கொள்வதுமில்லை.

.