Sunday, December 27, 2009

அவளின் காதல் கதை...

தட்டிலிருந்து தவறி விழும்
இறைச்சிக்காக
சுற்றிவரும் நாயின் நாக்கில்
டிராகனின் உக்கிரம் -
அவன் காதல்.

வேதாளத்தின் விடுகதைக்கு
விடை சொல்லபோய்
பந்தயத்தில் தோற்கிறாள் -
பாடலிபுரத்து பேசா மடந்தை

காதலின் தாழ்வாரத்தில்
ஒதுங்கிய வெண்புறாவை
வன்புனர்கிறது -
மலைபாம்பு

குறவனின் கையிலிருக்கும்
தேன்கூட்டின் மிச்ச சக்கை;
தாகம் தீர்ந்ததென
தூர்க்கப் பட்ட ஓர் கிணறு

விண்ணை நோக்கி எறியப்பட்ட
ஒரு கல்
மீண்டும் மண்ணில் விழுந்து
சலனமற்று போனது...
திசைகளை களவு கொடுத்த
கட்டுமரம்
அலைகழிகிறது
காற்றின் போக்கில்...

அணையும் தருவாயிலிருக்கும்
மாட விளக்கொன்றிர்க்கு
நல்லெண்ணெய் இட்டு
திரியை தூண்டுகிறாள்
சிறுமியொருத்தி...

போதிமரத்தின்
அடியில் மேயும்
பெட்டை மயிலின்
கையிலிருக்கிறது
உலகை அழிக்கும்
சாபம்

எச்சரிக்கை -
வெள்ளிகிழமை நடுநிசியில்
வேட்டைக்கு போகும்
ஒத்த பிடாரியை வழிமறித்தால்
நீங்கள் இரத்தம் கக்கி
செத்து போவீர்கள்

.

18 comments:

கமலேஷ் said...

அவனின் காதல் - அவளின் சம்மதம்
கற்பிழத்தல் - நிராகரிப்பு
நிலைகுலைதல் - வழிகாட்டி
கிளர்ந்தெழுதல்
இவைகளையே இங்கு மறைமுகமாக சொல்லி இருக்கிறேன்

சீமான்கனி said...

அருமையான கவிதைகள் ...அழகான வரிகளில் ஆழம் பார்க்கிறது கவிதை அருமை நண்பரே....வாழ்த்துகள்...

Paleo God said...

விண்ணை நோக்கி எறியப்பட்ட
ஒரு கல்
மீண்டும் மண்ணில் விழுந்து
சலனமற்று போனது...//

ஆயிரம் சேதி சொல்லிட்டீங்க நண்பரே... எனது கவிதைகளின் பிறப்பிடத்தில் நீங்களும் ஒரு தாய் ::))

சிவாஜி சங்கர் said...

//பந்தயத்தில் தோற்கிறாள் -
பாடலிபுரத்து பேசா மடந்தை//

//பெட்டை மயிலின்
கையிலிருக்கிறது
உலகை அழிக்கும்
சாபம்//

ஆஹா அசத்துறீங்க மாம்ஸ்.. :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான, ஆழமான கவிதை. வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan said...

//குறவனின் கையிலிருக்கும்
தேன்கூட்டின் மிச்ச சக்கை
தாகம் தீர்ந்ததென
தூர்க்கப் பட்ட ஓர் கிணறு//

அருமை கமலேஷ்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

//kamalesh said...
அவனின் காதல் - அவளின் சம்மதம்
கற்பிழத்தல் - நிராகரிப்பு
நிலைகுலைதல் - வழிகாட்டி
கிளர்ந்தெழுதல்
இவைகளையே இங்கு மறைமுகமாக சொல்லி இருக்கிறேன்
//

இந்த உங்க அப்ரோச் ரொம்ப பிடிச்சுருக்கு கமலேஷ்

இதனால எவ்ளோ சிறப்பான கவிதையை கற்பனையை இழக்கிறார்கள் பலர் நீங்கள் அப்படியில்லைஎன்று தெரிகிறது...

சிறப்பான கற்பனை கமலேஷ்...!

அரங்கப்பெருமாள் said...

//குறவனின் கையிலிருக்கும்
தேன்கூட்டின் மிச்ச சக்கை//

//அணையப் போகும்
தருவாயில் இருக்கும்
மாட விளக்கொன்றிர்க்கு
நல்லெண்ணெய் ஊற்றி
திரியை தூண்டுகிறாள்//

அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

வேல் கண்ணன் said...

மிக அருமை கமலேஷ்.
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

உயிரோடை said...

காத‌ல் க‌தையா இவ்வ‌ள‌வு டெர‌ராக‌ இருக்கு?

PPattian said...

அழகான கவிதை கமலேஷ். கொஞ்சம் புரியாத மாதிரி இருந்தாலும் அதுவே சுவை..

//திசைகளை களவு கொடுத்த
கட்டுமரம்
அலைகழிகிறது
காற்றின் போக்கில்...
//

இந்த வரிகள் பலர் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும்...

அறிவு GV said...

///காதலின் தாழ்வாரத்தில்
ஒதுங்கிய வெண்புறாவை
காமத்தின் திண்ணையில்
புனர்கிறது -ஒரு மலைபாம்பு

போதிமரத்தின்
அடியில் மேயும்
பெட்டை மயிலின்
கையிலிருக்கிறது
உலகை அழிக்கும்
சாபம் ///

கருத்தாழம் மிக்க வரிகள். மிகவும் அருமை கமலேஷ்.

Unknown said...

அன்பு கமலேசுக்கு
வணக்கம் , வேலைபளுவால் எழுதமுடியவில்லை.
தங்களின் இந்த கவிதை, பினவீனத்துவத்தையும் , எதார்த்தத்தையும் கலந்துள்ளது
எழுதும்போது இரண்டையும் தனித்தனியாக எழுதுங்கள்.
" எச்சரிக்கை -
வெள்ளிகிழமை நடுநிசியில்
வேட்டைக்கு போகும்
ஒத்த பிடாரியை வழிமறித்தால்
நீங்கள் இரத்தம் கக்கி
செத்து போவீர்கள்"

இது மட்டுமே ஒரு தனி கவிதை...
இனி தொடர்ந்து படிப்பேன்..

விஜய் said...

அள்ளித்தெளித்த அழகு வரிகளில் அழகாய் மிளிர்கிறது உமது கவிதைக்கோலம்

வாழ்த்துக்க்கள்

விஜய்

நேசமித்ரன் said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துகள்..

சந்தான சங்கர் said...

விண்ணை நோக்கி எறியப்பட்ட
ஒரு கல்
மீண்டும் மண்ணில் விழுந்து
சலனமற்று போனது...//

விண்ணின் சலனம்
தொட விழைந்து
விரைந்து பின்
வீழ்ந்து சலனமற்றுபோன கல்.




புத்தாண்டு வாழ்துக்கள் நண்பா..

கமலேஷ் said...

கருத்துரை இட்ட அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Tharshy said...

சிறப்பான கற்பனை கமலேஷ்...!அருமையான கவிதை,,,:)