Tuesday, July 20, 2010

வலியோடு கலையும் கனவு

வெயிலும், மழையும்
புனையலாடி திரியும் பொழுதொன்றில்
பிரசவிக்க துவங்கிய
வானவில்லின் அடிவாரத்தில்
காத்திருந்தேன்
என் ராஜகுமாரனுக்காக

சொட்டும் வர்ணங்களிலிருந்து
இறங்கி வந்தவன்
என் விரல்களைப் பிடுங்கி கொண்டு
ஓர் வீணையைப் பரிசளித்தான்.

கனவுகள் இறைக்கும் இதயத்தோடு
அவனை அழைத்துப்போய்
ஆர்ப்பரிக்கும் என் கடலை
அறிமுகப்படுத்தினேன்.

ஒரே மடக்கில்
அக் கடலை எடுத்துக் குடித்தவன்
வறண்ட பாலைவனத்தை வீசியெறிந்தபடி
அலட்சியமாய் செருமிக் காட்டினான்.

கண்ணீர் அவிழ்ந்து
காட்சிகள் உடையும் கண்களுடன்
மெல்லிய விசும்பலோடு
இது என் வானம் என்று
ஊனக்கைகளை உயர்த்திக் காட்டினேன்.

சூரியன் உதிரும் அளவிற்கு
அதை எடுத்து உதறியவன்
கக்கத்தின் வியர்வையைத் துடைத்தபடி
என்னை பழிக்கத் துவங்கினான்.

வேர்களைப் பொசுக்கும் நெருப்பில்
பொறுமையிழந்து வெடிக்கும்
மூங்கில் காடென
இது என் நீண்ட பெருவனம்
இதை நீ என்செய்வாய் என்றேன்.

ஒரு வாத்துக் கூட்டத்தை மேய்ப்பவன் போல
தன் கைத்தடியால்
மொத்த மரங்களையும் விரட்டியடித்தவன்
பொட்டல் வெளியில் நின்று
பலமாய் சிரிக்கத் துவங்கினான்.

இறுதியாய் வேறு வழியின்றி
என் சிறகிலிருந்து
இரத்தம் தோய்ந்த இறகொன்றைப் பிடுங்கி
மெல்லிய புன்னகையுடன்
அவன் கையில் கொடுத்தேன்.

கனம் தாளாமல்
சரியத்துவங்கினான்.

.

51 comments:

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லா யிருக்குங்க.

/புனையலாடி/

இது புதிய வார்த்தை அறிமுகம் எனக்கு.

Madumitha said...

கண்ணீர் அவிழ்ந்து
காட்சிகள் உடைக்கும் கண்களுடன்...

வித்தியாசமாக இருக்கிறது.
சபாஷ் கமலேஷ்.

D.R.Ashok said...

நல்லாவந்திருக்கு கமலேஷ்... பலே.. பலே... :)

’ஊனக்கைகள்’ மட்டும் சற்று இடறியது

Anonymous said...

நல்ல படைப்பு கமலேஷ், தொடருங்கள்

மார்கண்டேயன் said...

நல்ல படைப்பு கமலேஷ், தொடருங்கள் . . . சிறு தவறில் அநாமதேயமாகப் போய்விட்டது

ஹேமா said...

நல்லாயிருக்கு கமலேஸ்.
இறகின் பாரம் தாங்காத வீரனா !

புலவன் புலிகேசி said...

//இறுதியாய் வேறு வழியின்றி
என் சிறகிலிருந்து
இரத்தம் தோய்ந்த இறகொன்றைப் பிடுங்கி
மெல்லிய புன்னகையுடன்
அவன் கையில் கொடுத்தேன்//

அருமையான வரிகள்

நாடோடி said...

ந‌ல்லா வ‌ந்திருக்கு க‌ம‌லேஷ்... வாழ்த்துக்க‌ள்.

ஆறுமுகம் முருகேசன் said...

கவிதை ரொம்ப பிடிச்சுருக்கு நண்பா..

(அப்புறம், ஏன் நண்பா நான் சொன்ன விசயத்துல இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க?)

வெங்கட் நாகராஜ் said...

சிறகுகளின் பாரம் தாங்கவில்லை அந்த வீரன். அழகு. நல்லதொரு கவிதை பகிர்வுக்கு நன்றி கமலேஷ்.

சே.குமார் said...

//சொட்டும் வர்ணங்களிலிருந்து
இறங்கி வந்தவன்
என் விரல்களைப் பிடுங்கி கொண்டு
ஓர் வீணையைப் பரிசளித்தான்.//

வித்தியாசமாக இருக்கிறது.
சபாஷ் கமலேஷ்.

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள நண்பா,

ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு உவமைகளுடன் நேர்த்தியாய்... எங்கள் மனதில் குடிபுகுந்து வாழும் விதத்தில் அருமை.. அருமை... அருமை...

என் மனமார்ந்த வாழ்த்துகள்...

சுந்தர்ஜி said...

குருதியின் மொழி புரிந்தது ராஜகுமாரனுக்கு.சபாஷ் கமலேஷ்.

//ஒரு வாத்துக் கூட்டத்தை மேய்ப்பவன் போல
தன் கைத்தடியால்
மொத்த மரங்களையும் விரட்டியடித்தவன்//

இந்த வரி படமாய்ப் பிரிந்தது.

உயிரோடை said...

கவிதை நன்று.

பா.ராஜாராம் said...

அருமை கமலேஷ்!

தொடர்ச்சியான பிரமிப்பு ஏற்படுத்தும் பயணம்!

Geetha said...

Beautiful Kamalesh...

உங்கள் கவிதைகள் மிகவும் ஈர்க்கிறது.

வினோ said...

அழகு நண்பரே... புனையலாடி - இதை ரெண்டு தடவை படித்தேன்...மிக்க நன்றி நல்ல கவிதை...

சீமான்கனி said...

அருமை கமல்ஜி...வார்த்தைகள் அழகாய் வசப்படுகிறது உங்களுக்கு...மீண்டுவந்த வரிகளை... மீண்டும் படிக்கிறேன்...மீண்டும்...வாழ்த்துகள்

கே.ஆர்.பி.செந்தில் said...

என்ன ஒரு அற்புதமான கவிதை.. உங்கள் கவிதையின் பாரம் தாங்காமல் சரிந்து விட்டேன் தம்பி...

thenammailakshmanan said...

இறுதியாய் வேறு வழியின்றி
என் சிறகிலிருந்து
இரத்தம் தோய்ந்த இறகொன்றைப் பிடுங்கி
மெல்லிய புன்னகையுடன்
அவன் கையில் கொடுத்தேன்.

கனம் தாளாமல்
சரியத்துவங்கினான்.//நிஜமாவே அழ அடிச்சிட்டீங்க கமலேஷ் .. என்ன சொல்ல.. என் கண்ணீர்த்துளிகள் தான் காணிக்கை இந்தக் கவிதைக்கு

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

கவிதை ரொம்ப..ரொம்ப நல்லா இருக்கு

Chitra said...

கண்ணீர் அவிழ்ந்து
காட்சிகள் உடைக்கும் கண்களுடன்
மெல்லிய விசும்பலோடு
இது என் வானம் என்று
ஊனக்கைகளை உயர்த்திக் காட்டினேன்.

..... கனமான உணர்வுள்ள கவிதை.

அ.வெற்றிவேல் said...

மனதில் வலியேற்படுத்தும் வரிகள்
வாழ்த்துக்கள் கமலேஸ்..பா.ரா சொன்னார் .நேற்று நான் ஜூபைலில் இருந்தேன்..அடுத்த முறை கண்டிப்பாக பார்ப்போம்
அன்புடன்
வெற்றி

Sivaji Sankar said...

:)

அகல்விளக்கு said...

//ஒரு வாத்துக் கூட்டத்தை மேய்ப்பவன் போல
தன் கைத்தடியால்
மொத்த மரங்களையும் விரட்டியடித்தவன்//

காட்சிகளாய் விரிந்து பிரமிப்பை ஏற்படுத்துகிறது...

அருமை நண்பரே...

Riyas said...

நல்லாயிருக்கு கவிதை..வாழ்த்துக்கள்

Mohan said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது! கவிதையின் எல்லா வரிகளுமே வசியம் செய்கின்றன!

Mohan said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது! கவிதையின் எல்லா வரிகளுமே வசியம் செய்கின்றன!

நிலா மகள் said...

கண் வழி நுழைந்த வரிகள் கருத்தை கனப்படுத்தி விட்டு வெளிநடப்பு செய்கின்றன கண்ணீராய்... அருமையான கவிதை, வாழ்த்துகள் கமலேஷ்!

hayyram said...

gud post

regards
ram

www.hayyram.blogspot.com

அண்ணாமலை..!! said...

கனவுகளை வருடும் கற்பனைக்குச் சொந்தக்காரனாயிருக்கிறது கவிதை!

hemikrish said...

hayooo chance ye illa..எப்படி இதுக்கு comment கொடுக்கறதுன்னே தெரியல..அவ்வளவு கனமான கவிதை..இன்னும் நிறைய எழுதுங்க வாழ்த்துக்க‌ள்.

ரிஷபன் said...

கடைசியில் கவிதை ஜெயித்து விட்டது.. தன் ரத்தம் தோய்ந்த சிறகால்.

அப்பாவி தங்கமணி said...

நல்லா இருக்குங்க...

கா.பழனியப்பன் said...

" புனையலாடி " என்ற வார்த்தை புதிய அறிமுகமாக இருந்தது.
வாழ்த்துக்கள் நண்பா.

sugirtha said...

என்னென்னவோ சொல்லிகொடுக்கிறது கவிதை. எத்தனை முறை வாசித்தேன் தெரியவில்லை. என்ன சொல்வதென புரியவும் இல்லை.

kutipaiya said...

கடைசி வரிகள் மிக அருமை!!

சீமான்கனி said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்...

http://ganifriends.blogspot.com/2010/08/blog-post_03.html

கமலேஷ் said...

@ செல்வராஜ் ஜெகதீசன் : தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே.

@ மதுமிதா : வாங்க மது சார், மிக்க நன்றி சார்,

@ அசோக்: வாங்கன்னே..நன்றிண்ணே..

@ அனானி: இப்பதான் முதல் முறையா ஒரு அனானி கமென்ட் தளத்துல விழுதுன்னு நினைக்கிறன். கருத்திற்கு நன்றி தோழா/ தோழி.

@ மார்கண்டேன்யன்: வாங்க, வாங்க.. நன்றி நன்றி நண்பரே.

@ ஹேமா : ம், இதுபோல நிறைய பேர் உண்டு தோழி. நன்றி தோழி.

@ புலிகேசி : மிக்க நன்றி தோழரே,

கமலேஷ் said...

@நாடோடி : நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

@ ஆறுமுகம் : நன்றி நண்பா..பிடிவாதம் எல்லாம் ஒன்னும் கிடையாது..வெகு விரைவில் செய்வோம் நண்பா.

@ வெங்கட் நாகராஜ்: நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

@சே.குமார் : வாங்க நண்பரே..நன்றி நன்றி.

@ தஞ்சை வாசன்: நன்றி நண்பரே. உங்க தளம் கலை கட்டுது போல.

@ சுந்தர்ஜி: நன்றி சுந்தர் சார். தங்களின் கருத்திற்கு.

கமலேஷ் said...

@ உயிரோடை: நன்றி சகோதரி.

@ ராஜாராம் :வாங்கப்பா..எல்லாம் உங்க ஆசிர்வாதம்.

@ கீதா :அஹா, இதை போல கேக்கும் போது கொஞ்சம் சந்தோசமாத்தான் இருக்கு, மிக்க நன்றி தோழி...

@ வினோ: வாங்க வினோ மிக்க நன்றி நண்பரே.

@சீமான் கனி : வாங்க நண்பரே..நன்றி நன்றி..தொடர் பதிவுதான..எழுதிட்டா போச்சி.

@கே.ஆர்.பி செந்தில் : தங்களின் கருத்தரிக்கு மிக்க நன்றி அண்ணா.

@ தேனம்மை: மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

கமலேஷ் said...

@ அரண்ய நிவாஸ் ராமமூர்த்தி : தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

@ சித்ரா : மிக்க நன்றி தோழி.

@ வெற்றிவேல்: தங்களின் முதல் வருகைக்கு நன்றி சார் . தங்களை சந்திக்க முடியாமல் போனதில் மிகுந்த வருத்தம் மறுமுறை வரும்போது தெரியபடுத்துங்கள் சார். கட்டாயம் சந்திக்கலாம்.

@ சிவாஜி சங்கர் : நீங்க போட்ட ஸ்மைலிக்கு எப்படி பத்தி போடறது.ம். சரி நானும் உங்களுக்கு ஒரு )):-

@ அகல்விளக்கு : தங்களின் வருக்கைக்கு கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

@ ரியாஸ்: மிக்க நன்றி நண்பரே.

@மோகன் : மிக்க நன்றி
நண்பரே..தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

கமலேஷ் said...

@ நிலாமகள் : மிக்க நன்றி தோழி தங்களின் கருத்திற்கு.

@ ஹேராம்: நன்றி தோழரே தங்களின் வருகைக்கு.

@ அண்ணாமலை : வாங்க நண்பரே..அப்படியா! மிக்க நன்றி நண்பரே.

@ hemikrish : தங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிச்சி தோழி. மிக்க நன்றியும்.

@ ரிஷபன் : நன்றி நண்பரே.

@அப்பாவி தங்கமணி: ரொம்ப நன்றி தோழி.

@ பழனியப்பன்: வாங்க நண்பரே...ரொம்ப நாள் ஆச்சி பார்த்து..நீங்களும் ஏதும் போஸ்டே எழுதலை போல. நன்றி நண்பரே.

@ சுகிர்தா: தங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தோழி.

@ குட்டிப்பையா : வாங்க வாங்க, மிக்க நன்றி.

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

பா.ராஜாராம் said...

தம்பு, ஒரு தொடர் பதிவு அழைப்பு. நேரம் வாய்க்கிற போது தளம் வா.

Ananthi said...

///இறுதியாய் வேறு வழியின்றி
என் சிறகிலிருந்து
இரத்தம் தோய்ந்த இறகொன்றைப் பிடுங்கி
மெல்லிய புன்னகையுடன்
அவன் கையில் கொடுத்தேன்.

கனம் தாளாமல்
சரியத்துவங்கினான்.///

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..
கடைசி வரிகள்... அட்டகாசமா இருக்குங்க..
வாழ்த்துக்கள்..

கயல் said...

தொடர்பதிவுக்கு அழைத்திருக்கேன். சிறப்பிக்கவும்.
http://kayalsm.blogspot.com/2010/08/blog-post.html

தனி காட்டு ராஜா said...

//சூரியன் உதிரும் அளவிற்கு
அதை எடுத்து உதறியவன்//
முடியவே ...முடியாது ...யார் சொன்னாலும் இப்படி எழுத என்னால முடியாது .....

சேரல் said...

Fantastic Kamalesh!

-priyamudan
sEral

கோவை மு சரளா said...

என்ன ஒரு எழுத்து உள்ளீடுகள் அனைத்தும் வலியை உச்சத்தை சத்தம் இல்லாமல் சொல்லி செல்கிறது நிறைய எழுதுங்க

Rupan com said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-